Qurani·قرآني
தமிழ்

விவாகரத்து (தலாக்)

100 ஹதீஸ்கள் · #5251–5350

ஹதீஸ் 5331 — Sahih al Bukhari 68:76
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، أَنَّ مَعْقِلَ بْنَ يَسَارٍ، كَانَتْ أُخْتُهُ تَحْتَ رَجُلٍ فَطَلَّقَهَا، ثُمَّ خَلَّى عَنْهَا حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، ثُمَّ خَطَبَهَا فَحَمِيَ مَعْقِلٌ مِنَ ذَلِكَ أَنَفًا فَقَالَ خَلَّى عَنْهَا وَهْوَ يَقْدِرُ عَلَيْهَا، ثُمَّ يَخْطُبُهَا فَحَالَ بَيْنَهُ وَبَيْنَهَا، فَأَنْزَلَ اللَّهُ ‏{‏وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلاَ تَعْضُلُوهُنَّ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ، فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَ عَلَيْهِ، فَتَرَكَ الْحَمِيَّةَ وَاسْتَقَادَ لأَمْرِ اللَّهِ‏.‏
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரி, ஒருவரின் துணைவியாராக இருந்தார். அவருக்கு அவருடைய கணவர் மணவிலக்கு அளித்துவிட்டார். பின்னர் அவரது ‘இத்தா’ காலம் முடியும்வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியே விட்டுவிட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண்கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில் (ரலி) அவர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். மேலும், ‘‘(என் சகோதரி ‘இத்தா’வில் இருந்தபோது) அவளைத் திருப்பி அழைத்துக்கொள்ள அவருக்குச் சக்தியிருந்தும் அப்படியே விட்டுவிட்டு, (‘இத்தா’ முடிந்த)பிறகு (இப்போது வந்து) பெண் கேட்கிறாரே!” என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார். அப்போதுதான் அல்லாஹ், ‘‘நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் (‘இத்தா’) தவணையின் இறுதியை அடைந்துவிட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்துகொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்” எனும் (2:232 ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஅகில் (ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு ஓதிக் காட்டினார்கள். ஆகவே, அவர் தமது பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.89 அத்தியாயம் :
ஹதீஸ் 5332 — Sahih al Bukhari 68:77
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنهما ـ طَلَّقَ امْرَأَةً لَهُ وَهْىَ حَائِضٌ تَطْلِيقَةً وَاحِدَةً، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرَاجِعَهَا، ثُمَّ يُمْسِكَهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ عِنْدَهُ حَيْضَةً أُخْرَى، ثُمَّ يُمْهِلَهَا حَتَّى تَطْهُرَ مِنْ حَيْضِهَا، فَإِنْ أَرَادَ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا حِينَ تَطْهُرُ مِنْ قَبْلِ أَنْ يُجَامِعَهَا، فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ‏.‏ وَكَانَ عَبْدُ اللَّهِ إِذَا سُئِلَ عَنْ ذَلِكَ قَالَ لأَحَدِهِمْ إِنْ كُنْتَ طَلَّقْتَهَا ثَلاَثًا فَقَدْ حَرُمَتْ عَلَيْكَ، حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ‏.‏ وَزَادَ فِيهِ غَيْرُهُ عَنِ اللَّيْثِ حَدَّثَنِي نَافِعٌ قَالَ ابْنُ عُمَرَ لَوْ طَلَّقْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَنِي بِهَذَا‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளை யிட்டார்கள்: அவர் தம் மனைவியைத் திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை காத்திருந்துவிட்டு, அவர் அவளை தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னால் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக் கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும். இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவப்பட்டால், ‘‘உன் மனைவியை நீ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணந்து (உடலுறவு) கொள்ளும்வரை அவள் உனக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்” என்று பதிலளிப்பார்கள். மற்றோர் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘நீ ஒரு முறை, அல்லது இரு முறை தலாக் சொல்லியிருந்தால் (அவளைத் திருப்பி அழைத்துக்கொள்ளலாம்). இவ்வாறு (திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு)தான் நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளை யிட்டார்கள்” என்று கூறுவார்கள்.90 அத்தியாயம் :
ஹதீஸ் 5333 — Sahih al Bukhari 68:78
حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَنِي يُونُسُ بْنُ جُبَيْرٍ، سَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ، فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا، ثُمَّ يُطَلِّقَ مِنْ قُبُلِ عِدَّتِهَا، قُلْتُ فَتَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ قَالَ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ‏.‏
யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மணவிலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவள் ‘இத்தா’வை எதிர்கொள்வதற்கேற்ற (வகையில் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த) நேரத்தில் (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘அது ஒரு தலாக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.91 அத்தியாயம் :
ஹதீஸ் 5334 — Sahih al Bukhari 68:79
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ هَذِهِ الأَحَادِيثَ الثَّلاَثَةَ، قَالَتْ زَيْنَبُ دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَ أَبُوهَا أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، فَدَعَتْ أُمُّ حَبِيبَةَ بِطِيبٍ فِيهِ صُفْرَةٌ خَلُوقٌ أَوْ غَيْرُهُ فَدَهَنَتْ مِنْهُ جَارِيَةً، ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْهَا، ثُمَّ قَالَتْ وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ‏"‏‏.‏
ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், அவருடைய தந்தை அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன். அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். பின்னர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறுமணம் பூசினேன்.)” என்றார்கள்.93 அத்தியாயம் :
ஹதீஸ் 5335 — Sahih al Bukhari 68:80
قَالَتْ زَيْنَبُ فَدَخَلْتُ عَلَى زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ حِينَ تُوُفِّيَ أَخُوهَا، فَدَعَتْ بِطِيبٍ فَمَسَّتْ مِنْهُ، ثُمَّ قَالَتْ أَمَا وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ ‏ "‏ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ‏"‏‏.‏
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண் டார்கள். பிறகு, ‘‘இதோ! (பாருங்கள்.) அல்லாஹ் வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள் ளேன்” என்றார்கள்.94 அத்தியாயம் :
ஹதீஸ் 5336 — Sahih al Bukhari 68:81
قَالَتْ زَيْنَبُ وَسَمِعْتُ أُمَّ سَلَمَةَ، تَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدِ اشْتَكَتْ عَيْنَهَا أَفَتَكْحُلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ ‏"‏‏.‏ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا كُلَّ ذَلِكَ يَقُولُ لاَ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ، وَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَرْمِي بِالْبَعَرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ ‏"‏‏.‏
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஒரு பெண்மணி வந்து, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (‘இத்தா’விலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவள் தன் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் ‘வேண்டாம்’ என்றே கூறினார்கள். பிறகு, ‘‘(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) ‘இத்தா’ காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தான். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஒரு வருடம் ‘இத்தா’ இருப்பாள்.) ஆண்டின் முடிவில் (‘இத்தா’ முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லை)” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5337 — Sahih al Bukhari 68:82
قَالَ حُمَيْدٌ فَقُلْتُ لِزَيْنَبَ وَمَا تَرْمِي بِالْبَعَرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ فَقَالَتْ زَيْنَبُ كَانَتِ الْمَرْأَةُ إِذَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا دَخَلَتْ حِفْشًا، وَلَبِسَتْ شَرَّ ثِيَابِهَا، وَلَمْ تَمَسَّ طِيبًا حَتَّى تَمُرَّ بِهَا سَنَةٌ، ثُمَّ تُؤْتَى بِدَابَّةٍ حِمَارٍ أَوْ شَاةٍ أَوْ طَائِرٍ فَتَفْتَضُّ بِهِ، فَقَلَّمَا تَفْتَضُّ بِشَىْءٍ إِلاَّ مَاتَ، ثُمَّ تَخْرُجُ فَتُعْطَى بَعَرَةً فَتَرْمِي، ثُمَّ تُرَاجِعُ بَعْدُ مَا شَاءَتْ مِنْ طِيبٍ أَوْ غَيْرِهِ‏.‏ سُئِلَ مَالِكٌ مَا تَفْتَضُّ بِهِ قَالَ تَمْسَحُ بِهِ جِلْدَهَا‏.‏
ஹுமைத் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், ‘‘ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள்” என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்துகொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத் தையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளது உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பது அரிதேயாகும். பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன்பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே ‘இத்தா’ முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்றவற்றையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள். (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘தஃப்தள்ளு பிஹி’ (அதன் மீது தேய்த்துக் கொள்வாள்) எனும் சொற்றொடரின் கருத்தென்ன?’ என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர்கள், ‘அந்தப் பெண் அந்த உயிரினத்தின் மீது தன் உடலைத் தேய்த்துக்கொள்வாள்’ என்று (பொருள்) சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5338 — Sahih al Bukhari 68:83
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّهَا، أَنَّ امْرَأَةً، تُوُفِّيَ زَوْجُهَا فَخَشُوا عَلَى عَيْنَيْهَا فَأَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنُوهُ فِي الْكُحْلِ فَقَالَ ‏ "‏ لاَ تَكَحَّلْ قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَمْكُثُ فِي شَرِّ أَحْلاَسِهَا أَوْ شَرِّ بَيْتِهَا، فَإِذَا كَانَ حَوْلٌ فَمَرَّ كَلْبٌ رَمَتْ بِبَعَرَةٍ، فَلاَ حَتَّى تَمْضِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ ‏"‏‏.‏
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். (‘இத்தா’வில் இருந்த அவளது கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய ‘ஆடைகளிலேயே மோசமானதில்’ அல்லது ‘மோசமான வீட்டில்’ தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒரு வருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) ஆகவே, அவள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழியும்வரை அஞ்சனம் இடவேண்டாம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5339 — Sahih al Bukhari 68:84
وَسَمِعْتُ زَيْنَبَ ابْنَةَ أُمِّ سَلَمَةَ، تُحَدِّثُ عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ مُسْلِمَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ، إِلاَّ عَلَى زَوْجِهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! இதை (அன்னை) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5340 — Sahih al Bukhari 68:85
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَتْ أُمُّ عَطِيَّةَ نُهِينَا أَنْ نُحِدَّ أَكْثَرَ مِنْ ثَلاَثٍ إِلاَّ بِزَوْجٍ‏.‏
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாட்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.