சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் எனக்கில்லை. எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். “அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று சொன்னார்கள். “மூன்றில் ஒரு பங்கை (தர்மம் செய்யட்டுமா?)” என்று கேட்டேன். நபியவர்கள், “மூன்றில் ஒரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச்செல்வதே சாலச்சிறந்ததாகும். (நல்ல நோக்கத்தில்) நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்கு நிச்சயம் நற்பலன் வழங்கப்படும்; நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவாயினும் சரி! (அதற்கும் நற்பலன் உண்டு)” என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ் முடிந்து என் தோழர்கள் அனைவரும் மதீனா சென்றுவிடுவார்கள்.) நான் மட்டும் என் ஹிஜ்ரத் பூமி(யான மதீனாவு)க்குச் செல்லாமல் (மக்காவிலேயே) தங்கிவிடுவேனா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (மதீனா) சென்றபிறகு நீங்கள் இங்கேயே தங்கியிருந்து, அல்லாஹ்வின் அன்பை நாடி எந்த நல்லறம் புரிந்தாலும் அதன் மூலம் உங்கள் உயர்வும் தகுதியும் அதிகமாகவே செய்யும். நான் (மதீனா) சென்றபிறகு, உங்கள் மூலம் சிலர் நன்மையடைவதற்காவும் மற்றச் சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம். ஆனால், பாவம், சஅத் பின் கவ்லா! (அவருடைய ஆசை நிறைவேறவில்லை)” என்று மக்காவிலேயே இறந்துவிட்ட சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்தவராவார்.14 அத்தியாயம் :
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதக ராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துபோன ஒருவரைக் குறித்து (பாகப்பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6735 — Sahih al Bukhari 85:12
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَهْوَ لأَوْلَى رَجُلٍ ذَكَرٍ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாகப்பிரிவினை தொடர்பாக குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 அத்தியாயம் :
ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா (ரலி) அவர்களிடம், (இறந்துபோன ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப்பாதியும் கிடைக்கும் (மகனுடைய மகளுக்கு ஒன்றும் கிடையாது)” என்று கூறிவிட்டு, “(வேண்டுமானால்,) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்)பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (சென்று) அபூமூசா (ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாகிவிடுவேன்; நான் நல்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மூன்றில் இரு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்” என்றார்கள். பின்னர் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, “இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்ஊத்-ரலி) உங்களிடையே இருக்கும்வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்” என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.16 அத்தியாயம் :
ஹதீஸ் 6737 — Sahih al Bukhari 85:14
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَلأَوْلَى رَجُلٍ ذَكَرٍ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயத்தில் யாரையேனும் நான் உற்றநண்பராக ஆக்கிக்கொள் வதாயிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய சகோதரத்துவமே (எல்லா உறவுகளையும் விடச்) ‘சிறந்தது’ அல்லது ‘நல்லது” என்று யார் விஷயத்தில் கூறினார்களோ (அந்த அபூபக்ர்-ரலி) அவர்கள்தான், (சொத்துரிமை பெறுவதில்) பாட்டனாரை ‘தந்தையின் இடத்தில் வைத்தார்கள்’ அல்லது ‘தந்தை’ எனத் தீர்ப்பளித்தார்கள்.22 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறந்துபோனவர் விட்டுச்சென்ற) செல்வம் (அவருடைய) குழந்தைகளுக்கு (மட்டுமே) உரியதாக இருந்தது. பெற்றோருக்கு(ப் பங்கு கிடைக்க வேண்டுமெனில் இறந்தவர்) இறுதி விருப்பம் தெரிவித்திருக்க வேண்டும் என்றிருந்தது. இதில் அல்லாஹ், தான் நாடியதை மாற்றியமைத்து, ‘ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பங்கு’ என்ற விகிதத்தை ஏற்படுத்தினான். பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் என்று நிர்ணயித்தான். (குழந்தை இருக்கும்போது) மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் (குழந்தை இல்லாதபோது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான். (குழந்தை இல்லாதபோது) கணவனுக்குச் சரிபாதியும் (குழந்தை இருக்கும்போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 6740 — Sahih al Bukhari 85:17
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ. ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قَضَى عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ، فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا، وَأَنَّ الْعَقْلَ عَلَى عَصَبَتِهَا ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிóருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு இழப்பீடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், இழப்பீடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார். ஆகவே, (அவர் சார்பாக) அவருடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும், அவரது சொத்து அவருடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.24 அத்தியாயம் :
ஹதீஸ் 6741 — Sahih al Bukhari 85:18
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَضَى فِينَا مُعَاذُ بْنُ جَبَلٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النِّصْفُ لِلاِبْنَةِ وَالنِّصْفُ لِلأُخْتِ. ثُمَّ قَالَ سُلَيْمَانُ قَضَى فِينَا. وَلَمْ يَذْكُرْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “(சொத்தில்) பாதி (இறந்தவரின்) மகளுக் கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்டவாறு) தீர்ப்பளித்தார்கள்” என்று காணப்படுகிறது. ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்’ என்ற குறிப்பு இடம்பெறவில்லை.26 அத்தியாயம் :
ஹதீஸ் 6742 — Sahih al Bukhari 85:19
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لأَقْضِيَنَّ فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِلاِبْنَةِ النِّصْفُ، وَلاِبْنَةِ الاِبْنِ السُّدُسُ، وَمَا بَقِيَ فَلِلأُخْتِ.
ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இந்தச் சொத்து விஷயத்தில் ‘நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘‘ என்று சொல்லிவிட்டு, “(இறந்தவரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும்” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.27 அத்தியாயம் :