حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنَ الْعَرَبِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மாதம் (ஃபஜ்ர் தொழுகையில்) ருகூஉவிற்குப் பின்னால் அரபுக் குலத்தார் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஅல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தார்163 (வந்து தம்முடைய) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி வைத்து நபி (ஸல்) அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் “குர்ராஉ' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று பெயரிட்டு அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் (பிழைப்பிற்காக) விறகு சேகரிப்பவர்களாகவும் இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்துவந்தனர். இவர்கள் (பயணம் செய்து) “பிஃரு மஊனா' எனுமிடத்தை அடைந்தபோது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக் கொன்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியபோது ஒரு மாத காலம் சுப்ஹ் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஅல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்து “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப்பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதிவந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டோம். அவன் எங்கள் மீது அன்பு கொண்டான்; எங்களை அவன் அன்பு கொள்ளச்செய்தான்' என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனமாகும்.164 அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதகாலம்வரையில் சுப்ஹ் தொழுகையில் அரபுக் குலங்களைச் சேர்ந்த ரிஅல், தக்வான், உஸய்யா, மற்றும் பனூ லிஹ்யான் ஆகிய கூட்டத்தாருக்கு எதிராக “குனூத்' பிரார்த்தனை புரிந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கலீஃபா பின் கய்யாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அன்சாரிகளான அந்த எழுபது பேரும் பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டார்கள்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
அனஸ் (பின் மாலிக் - ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர், என் தாய் மாமா (ஹராம் பின் மில்ஹான் - ரலி) அவர்களை (குர்ஆனை நன்கறிந்தவர்களான எழுபது) பயணிகளில் ஒருவராக நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இணைவைப்பாளர்களின் தலைவன் ஆமிர் பின் துஃபைல், பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும்படி (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினான்: கிராமப்புற மக்கள் உங்களுக்குச் சொந்தம்; (அவர்களுக்கு ஆட்சியாளராக நீங்கள் இருங்கள்;) நகர்ப்புற மக்கள் எனக்குச் சொந்தம். (நான் அவர்களுக்கு ஆட்சியாளராக இருப்பேன்.) அல்லது நான் உங்களுக்கு கலீஃபாவாக (பிரதிநிதியாக) இருப்பேன். அல்லது ஆயிரக்கணக்கான ஃகதஃபான் குலத்தாருடன் (வந்து) உங்களோடு போர் தொடுப்பேன்” என்று கூறினான். பிறகு இன்னாரின் தாய் வீட்டில் “ஆமிர்' கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டான். அப்போது அவன், “இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் இளம் ஒட்டகத்திற்கு ஏற்படும் கொள்ளை நோய் போன்று (எனக்கும்) ஏற்பட்டுவிட்டது. எனவே, எனது குதிரையை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினான். பிறகு அவன் தனது குதிரையின் முதுகின் மீதே இறந்துபோனான்.165 (என் தாய்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும், கால் ஊனமுற்றவர் ஒருவரும், இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரும்166 (நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் பனூ ஆமிர் குலத்தாரை நோக்கி) நடந்தார்கள். அப்போது ஹராம் அவர்கள் (தம்மிரு சகாக்களை நோக்கி), “நீங்கள் இருவரும் (எனக்கு) அருகிலேயே இருங்கள். நான் பனூ ஆமிர் குலத்தாரிடம் செல்கிறேன். அவர்கள் எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்றுவிட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (தெரிவித்து)விடுங்கள்” என்று கூறி னார்கள். (பிறகு, பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி,) “எனக்குப் பாதுகாப்புத் தருவீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தியைத் தெரிவிக்கிறேன்” என்று கேட்டுவிட்டு அவர்களிடம் (அந்தச் செய்தியைப்) பேசலானார்கள். அப்போது அக்குலத்தார் ஒருவனுக்குச் சைகை செய்ய, அவன் ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்து அவர்களை (ஈட்டியால்) குத்திவிட்டான். -அறிவிப்பாளர் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) கூறுகிறார்கள்: “ஈட்டியால் குத்தி (மறுபக்கம்வரை) செலுத்தினான்' என்று கூறியதாக எண்ணுகிறேன்.- உடனே ஹராம் அவர்கள், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்). கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு அன்னாரின் உயிர் பிரிந்தது. கால் ஊனமுற்றவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அந்த ஊனமுற்றவர் மலை உச்சியில் இருந்தார். பிறகு, (இச்சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் தொடர்பாக) அல்லாஹ் எங்கள்மீது (ஒரு வசனத்தை) அருளினான். பிறகு அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணையின்படி) நீக்கப்பட்டுவிட்டது. “நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டோம். அவன் எங்கள்மீது அன்பு கொண்டான். (அருள் வளங்களை அள்ளித் தந்து) எங்களை அவன் அன்பு கொள்ளச் செய்தான்” (என்பதே அந்த வசனம்). ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் விரோதமாக நடந்துகொண்ட உஸய்யா ஆகிய குலத்தாருக்கெதிராக முப்பது நாள் அதிகாலை(த் தொழுகை)யில் பிரார்த்தனை புரிந்தார்கள்.167 அத்தியாயம் :
ஹதீஸ் 4092 — Sahih al Bukhari 64:136
حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا طُعِنَ حَرَامُ بْنُ مِلْحَانَ ـ وَكَانَ خَالَهُ ـ يَوْمَ بِئْرِ مَعُونَةَ قَالَ بِالدَّمِ هَكَذَا، فَنَضَحَهُ عَلَى وَجْهِهِ وَرَأْسِهِ، ثُمَّ قَالَ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “பிஃரு மஊனா' சம்பவத்தின்போது, என் தாய்மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள் (ஈட்டியால்) குத்தப்பட்ட சமயத்தில், தமது காயத்திலிருந்து - இதோ இப்படி - இரத்தத்தை அள்ளித் தமது முகத்தின் மீதும் தலையின் மீதும் தெளித்துக்கொண்டு, “கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையானபோது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(சற்று) பொறுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நீங்கள் ஹிஜ்ரத் செல்ல) தங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (“ஆம்') நான் அதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறிவந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்பு ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், லுஹ்ர் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அவர்களை அழைத்தார்கள். மேலும், “(அபூபக்ர் அவர்களே! நான் இரகசியம் பேச வேண்டும்) உங்களுடன் இருப்பவர்களை வெளியே செல்லும்படி கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னுடனிருக்கும்) இந்த இருவரும் என்னிரு பெண்மக்கள் (ஆயிஷாவும், அஸ்மாவும்)தான்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து, மக்காவிலிருந்து) புறப்பட எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது உங்களுக்குத் தெரிந்ததா?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நானும் உடன் வருவதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, “(ஆம்) உடன் வருவதை விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் இரண்டு ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்வதற்கென தயார் நிலையில் வைத்துள்ளேன்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்பு, அவற்றில் ஒன்றை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒட்டகத்திற்கு “ஜத்ஆ' என்று பெயர். பிறகு இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்று, ஸவ்ர் (மலைக்) குகைக்கு வந்து அதில் அவர்கள் இருவரும் ஒளிந்துகொண்டனர். ஆமிர் பின் ஃபுஹைரா, என் தாய்வழிச் சகோதரர் துஃபைல் பின் அப்தில்லாஹ் பின் சக்பரா அவர்களின் அடிமையாக இருந்தார். மேலும், (என் தந்தை) அபூபக்ர் அவர்களிடம் பால் தரும் ஒட்டகம் ஒன்றிருந்தது. ஆமிர் பின் ஃபுஹைரா அந்த ஒட்டகத்தை மக்காவாசிகளுடன் மதிய வேளையிலும் காலை வேளையிலும் ஓட்டிச் செல்லக் கூடியவராக இருந்தார். காலை நேரத்தில் மக்காவாசிகளுடன் இருக்கும் அவர், இரவின் கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடமும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் (அவர்களுக்கு ஒட்டகப் பால் தருவதற்காகச்) சென்றுவிடுவார். பிறகு அந்த ஒட்டகத்தை (மேய்ப்பதற்கு) ஓட்டிச் செல்வார். ஆனால், இடையர்களில் யாருக்கும் இது தெரியாது. நபி (ஸல்) அவர்கள் (குகையிலிருந்து அபூபக்ருடன்) புறப்பட்டபோது அவ்விருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் புறப்பட்டார். மதீனா போய்ச் சேரும்வரையில் அவர்கள் இருவரும் (முறைமாற்றி) ஆமிரைத் தமக்குப்பின் அமர்த்திக்கொண்டனர். (பின்பு) பிஃரு மஊனா நாளில் ஆமிர் பின் ஃபுஹைரா கொல்லப்பட்டார்.168 உர்வா (பின் அஸ்ஸுபைர் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிஃரு மஊனாவில் இருந்த (குர்ஆனை நன்கறிந்த)வர்கள் கொல்லப்பட்டு அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கைது செய்யப்பட்டபோது அன்னாரைப் பார்த்து ஆமிர் பின் துஃபைல், கொல்லப்பட்டுக் கிடந்த (உயிர்த் தியாகிகளில்) ஒருவரைச் சுட்டிக்காட்டி, “இவர் யார்?” என்று கேட்டான். அதற்கு அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள், “இவர் ஆமிர் பின் ஃபுஹைரா” என்று கூறினார். அதற்கு ஆமிர் பின் துஃபைல், “இவர் கொல்லப்பட்ட பின்பு இவர் வானத்திற்கு உயர்த்தப்படுவதை நான் கண்டேன். எந்த அளவுக்கென்றால் வானத்தை நான் நோக்கியபோது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அவர் இருந்தார். பிறகு அவர் (பூமியில்) வைக்கப்பட்டார்” என்று கூறினான். (கொல்லப்பட்ட) அவர்களின் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு (வானவர் ஜிப்ரீல் மூலம்) எட்டியது. அவர்கள் கொல்லப்பட்ட செய்தியைத் தம் தோழர்களுக்கு (பின்வருமாறு) நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: உங்கள் தோழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் தம் இறைவனிடம், “இறைவா! நாங்கள் உன்மீது அன்பு கொண்டோம். நீ எங்கள்மீது அன்பு கொண்டாய்; எங்களைப் பற்றிய இந்தச் செய்தியை எங்கள் சகோதரர்களுக்குத் தெரிவித்துவிடுவாயாக!” என்று கூறினர். எனவே இறைவன் அவர்களைப் பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தான். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) கூறுகிறார்கள்: (பிஃரு மஊனா நிகழ்ச்சி நடந்த) அந்நாளில் அவர்களில் உர்வா பின் அஸ்மா பின் அஸ்ஸல்த் (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (ஸுபைர் (ரலி) அவர்களின் மகனாகிய) எனக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. (அன்று) முன்திர் பின் அம்ர் (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (என் சகோதரர் முன்திர் பின் ஸுபைருக்கு) “முன்திர்' எனப் பெயரிடப்பட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 4094 — Sahih al Bukhari 64:138
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ " عُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். (அதில்) ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டனர்” என்றும் கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 4095 — Sahih al Bukhari 64:139
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الَّذِينَ قَتَلُوا ـ يَعْنِي ـ أَصْحَابَهُ بِبِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ صَبَاحًا حِينَ يَدْعُو عَلَى رِعْلٍ وَلِحْيَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم. قَالَ أَنَسٌ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى لِنَبِيِّهِ صلى الله عليه وسلم فِي الَّذِينَ قُتِلُوا أَصْحَابِ بِئْرِ مَعُونَةَ قُرْآنًا قَرَأْنَاهُ حَتَّى نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا فَقَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் அதிகாலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஆகவே, இறைவன் தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) காலாவதியாக் கப்பட்டது. (அந்த வசனம் இதுதான்:) “நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்கள்மீது அன்பு கொண்டான். நாங்களும் அவன்மீது அன்பு கொண் டோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்.169 அத்தியாயம் :
ஹதீஸ் 4096 — Sahih al Bukhari 64:140
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ الْقُنُوتِ، فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ. فَقُلْتُ كَانَ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ قَبْلَهُ. قُلْتُ فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَهُ، قَالَ كَذَبَ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا، أَنَّهُ كَانَ بَعَثَ نَاسًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ، وَهُمْ سَبْعُونَ رَجُلاً إِلَى نَاسٍ مِنَ الْمُشْرِكِينَ، وَبَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ قِبَلَهُمْ، فَظَهَرَ هَؤُلاَءِ الَّذِينَ كَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ، فَقَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ.
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (எனும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நான், “ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னால்தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம்கூட) ஒரு மாத காலம்தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் “குர்ரா' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று கூறப்பட்டுவந்த சிலரை -அவர்கள் எழுபது பேர் ஆவர்- இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களது தரப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பர பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த இவர்களது கை ஓங்கிவிட்டது. (அந்த 70 பேரையும் கொன்றுவிட்டனர்.) “எனவேதான், அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குனூத்' ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.170 அத்தியாயம் :
ஹதீஸ் 4097 — Sahih al Bukhari 64:141
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهْوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ فَلَمْ يُجِزْهُ، وَعَرَضَهُ يَوْمَ الْخَنْدَقِ وَهْوَ ابْنُ خَمْسَ عَشْرَةَ فَأَجَازَهُ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது (படை வீரர்களைப் பார்வையிட்டு ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களிடம் நானாக முன்சென்று(என்னைப் படையில் சேர்த்துக்கொள்ளும் படி) கேட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது. எனவே, என்னை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு (அடுத்த ஆண்டு) அகழ்ப் போரின் போது நானாக முன்சென்று கேட்டேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. எனவே, என்னை அனுமதித்தார்கள்.172 அத்தியாயம் :
ஹதீஸ் 4098 — Sahih al Bukhari 64:142
حَدَّثَنِي قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَنْدَقِ، وَهُمْ يَحْفِرُونَ، وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَادِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ، فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ ".
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக்கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள்மீது மண் சுமந்துகொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா!மறுமை வாழ்வு தவிரவேறுவாழ்வு கிடையாது. (அதற்காக உழைக்கும்)முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும்வழங்குவாய் மன்னிப்பு!” என்று (பாடியபடி) கூறினார்கள்.173 அத்தியாயம் :