சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான், ‘‘அவனுக்குரிய தண்டனை நரகம்தான்” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘‘அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது” என்று சொன்னார்கள். புகழோங்கிய இறைவனின் ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை” எனும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்டதற்கு, ‘‘இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.5 அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றியும், ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்” என்று தொடங்கி ‘‘பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர் தவிர” என்று முடியும் (25:68-70) வசனங் கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நான்தான் அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இந்த வசனங்கள் (25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடை விதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீய செயல்கள் புரிந்தோம். (ஆகவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)” என்று கூறிக்கொண்டனர். ஆகவே அல்லாஹ், ‘‘அவர்களில் எவர் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும் கருணையுடையோனும் ஆவான்” எனும் (25:70ஆவது) வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” என்று தொடங்கும் (4:93ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்த (4:93ஆவது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை” என்று சொன்னார்கள். ‘‘அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை” என்று தொடங்கும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.6 அத்தியாயம் :
மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இந்த 25:77ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘லிஸாமன்’ எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, கிழக்கு ரோமானியர் (தோல்வியடைந்து பின்னர் அவர்கள் வெற்றி காண்பது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனையான பிடியும் அவனுடைய வேதனையும்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 4768 — Sahih al Bukhari 65:290
وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ ـ رَأَى أَبَاهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ الْغَبَرَةُ وَالْقَتَرَةُ ". الْغَبَرَةُ هِيَ الْقَتَرَةُ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஃகபரா’, ‘அல்கத்தரா’ ஆகிய சொற்களுக்கு (‘புழுதி’ எனும்) ஒரே பொருள் ஆகும். அத்தியாயம் :
ஹதீஸ் 4769 — Sahih al Bukhari 65:291
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ فَيَقُولُ يَا رَبِّ إِنَّكَ وَعَدْتَنِي أَنْ لاَ تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ فَيَقُولُ اللَّهُ إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘இறை மறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்துவிட்டேன்” என்று பதிலளிப்பான்.4 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின்மீது ஏறிக்கொண்டு, ‘‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குடும்பங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் ‘‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், ‘‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் ‘‘அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.5 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ், ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) வசனத்தை அருளியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக்’ கூறியழைத்து, ‘‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கி (காப்பாற்றி)க்கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தóபின் புதல்வரான (என் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது” என்று சொன்னார்கள்.6 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘என் தந்தையின் சகோதரரே! ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் ‘‘அபூதாóபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்ன தையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், ‘‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.2 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலில் குவ்வத்தி’ (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால்கூட சுமக்க முடியாது. ‘ல தனூஉ’ எனும் சொல்லுக்கு ‘சிரமமாக மாறும்’ என்பது பொருள். (28:10ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபாரிஃகா’ எனும் சொல்லுக்கு ‘(மூசாவுடைய தாயாரின் உள்ளம்) மூசாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது’ என்று பொருள். (28:76ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டோர்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பூரிப்படைவோர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (28:11ஆவது வசனத்திலுள்ள) ‘அவரை நீ பின்தொடர்ந்து செல்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘குஸ்ஸீஹி’ எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் ‘சம்பவத்தை எடுத்துரைத்தல்’ எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் ஜுனுபின்’ எனும் சொல்லுக்கு ‘தூரத்திலிருந்து’ என்பது பொருள். (இச்சொல்லும்) ‘அன் ஜனாபத்தின்’ எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. ‘அன் இஜ்தினாப்’ எனும் சொல்லும் அவ்வாறே. (28:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்தி” (தாக்க) எனும் சொல் ‘யப்து” என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. (28:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃதமிரூன’ எனும் சொல்லுக்கு ‘ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று பொருள். (28:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உத்வான்’ எனும் சொல்லும், ‘அல்அதாஉ’ எனும் சொல்லும், ‘அத்தஅத்தீ’ எனும் சொல்லும் (‘எல்லை மீறல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (28:29ஆவது வசனத்திலுள்ள) ‘கண்டார்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஆனஸ’ எனும் சொல்லுக்குரியதாகும். (28:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜத்வா’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி’ என்பது பொருள். (27:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷிஹாப்’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி’ என்பது பொருள். (28:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜான்’ எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். ‘அஃபாஈ’ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் ‘அசாவித்’ (கருநாகம்) ஆகியவற்றையும் (20:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்யத்’ (பாம்பு) எனும் சொல் குறிக்கும். (28:34ஆவது வசனத்திலுள்ள) ‘உதவியாளர்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ரித்ஃ’ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘யுஸத்திக்குனீ’ (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (வேறுசிலர் ‘யுஸத்திக்னீ’ என்று ஓதியுள்ளார்கள்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (28:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஷுத்து’ எனும் சொல்லுக்கு, ‘உமக்கு நாம் உதவி புரிவோம்’ என்று பொருள். (‘ஸ நஷுத்து அளுதக்க’ என்பதற்கு ‘உமது கரத்தை நாம் வலுப்படுத்துவோம்’ என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்குக் கரமாக ஆகிவிடுகிறாய்! (அதனால், இங்கு ‘கரம்’ அல்லது ‘கொடுங்கை’ (‘அளுத்’) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.) (28:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்பூஹீன்’ எனும் சொல்லுக்கு ‘நாசமடைந்தவர்கள்’ என்பது பொருள். (28:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல’ எனும் வாக்கியத்திற்கு ‘(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள். (28:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஜ்பா’ எனும் சொல்லுக்கு ‘கொண்டுவரப்படுகிறது’ என்பது பொருள். (28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்திரத்’ எனும் சொல்லுக்கு ‘அடாவடித்தனம் புரிந்தனர்’ என்று பொருள். (28:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்மிஹா’ (அதன் தலைநகர்) என்பது மக்காவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும். (28:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துகின்னு’ எனும் சொல்லுக்கு ‘(உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) ‘அக்னன்த்து’ என்பதற்கு ‘மறைத்தேன்’ என்று பொருள். (இதையே) ‘கனன்த்து’ என்று சொன்னால் ‘மறைத்தேன்’ என்றும், ‘வெளிப்படுத்தினேன்’ என்றும் (எதிரிடைப்) பொருள் வரும். (28:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வை கஅன்ன’ எனும் சொல், ‘அலம் தர’ (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு ‘என்ன நேர்ந்தது’ என்றும், ‘ஆச்சரியம்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்சுத்து’ எனும் சொல்லுக்குத் ‘தாராளமாக வழங்குகிறான்’ என்றும், ‘யக்திரு’ எனும் சொல்லுக்கு ‘சுருக்கிவிடுகின்றான்’ என்றும் பொருள். அத்தியாயம் :
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (28:85ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் திரும்ப வேண்டிய இடம்’ (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள். அத்தியாயம் :