அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று, தூய வெண்மையான (சம)தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப் படுவார்கள். அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது. இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்" (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸிராத் (எனும் நரகப் பாலத்தின்) மீது" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் இந்தப் பூமி, (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றி) தட்டிப்போடுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். அதையே சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்" என்று சொன்னார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அபுல்காசிமே! அளவற்ற அருளாளன் தங்களுக்கு வளம் வழங்கட்டும்! மறுமைநாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரி" என்றார்கள். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே, "மறுமை நாளில் இந்தப் பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) இருக்கும்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு "(அபுல்காசிமே!) உங்களுக்குச் சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?" என்று அந்த யூதர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி" என்றார்கள். அவர், "அவர்களின் குழம்பு "பாலாம் மற்றும் நூன்" என்றார். மக்கள் "இது என்ன?" என்று கேட்டார்கள். அந்த யூதர், ("அவை) காளை மாடும் மீனும் ஆகும். அவ்விரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்" என்று கூறினார். அத்தியாயம் :
ஹதீஸ் 7058 — Sahih Muslim 52:14
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَابَعَنِي عَشْرَةٌ مِنَ الْيَهُودِ لَمْ يَبْقَ عَلَى ظَهْرِهَا يَهُودِيٌّ إِلاَّ أَسْلَمَ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்னைப் பின்பற்றியிருப்பார்களாயின், பூமியின் மீதுள்ள அனைத்து யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந்தோப்பில்) சென்று கொண்டிருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்" என்றார். மற்றவர்கள், "உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)" என்றார்கள். பின்னர் அவர்கள், "(சரி) அவரிடம் கேளுங்கள்" என்றனர். உடனே அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்துவந்து, அவர்களிடம் உயிரைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என நான் அறிந்து கொண்டேன். ஆகவே, நான் அதே இடத்தில் நின்றுகொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள் "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். "உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்று கூறுவீராக" (17:85) எனும் இறை வசனத்தைக் கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஒரு வேளாண் பூமியில் சென்று கொண்டிருந்தேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் அலீ பின் கஷ்ரம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("நீங்கள் கொடுக்கப் பட்டுள்ளீர்கள்" என்பதற்குப் பதிலாக) "அவர்கள் கொடுக்கப்பட்டுள்ளார்கள்" என்று இடம் பெற்றுள்ளதாக ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சந்தோட்டத்தில் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியபடி இருந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பிலும் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே காணப்படுகிறது. அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இணைவைப்பாளர்) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், "நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் (உனது கடனை) உனக்குத் தரமாட்டேன்" என்று சொன்னார். நான், "அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்" என்று கூறினேன். அவர், "நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா? அவ்வாறாயின், நான் (மறுமையில்) பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் திரும்பப் பெறும்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்" என்று (கிண்டலாகச்) சொன்னார். அப்போதுதான், "நம் வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? எனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் சொல்வதை நாம் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனுடைய செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகிவிடுவோம். தன்னந்தனியாகவே நம்மிடம் அவன் வருவான்" (19:77-80) எனும் இந்த வசனங்கள் அருளப்பெற்றன. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக வேலை பார்த்துவந்தேன். ஆஸ் பின் வாயில் என்பாருக்கு ஒரு வேலையைச் செய்து கொடுத்துவிட்டு அதற்குரிய கூலியைக் கேட்பதற்காக அவரிடம் சென்றேன்" என்று கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :