உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது இரவுகள் (கருவாக) சேமிக்கப்படுகிறார்" என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து முஆத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும்" என்று இடம் பெற்றுள்ளது. ஜரீர் மற்றும் ஈசா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நாற்பது நாட்கள்" என்று உள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, "இறைவா! இவன் நற்பேறற்றவனா?அல்லது நற்பேறு பெற்றவனா?" என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு "இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?" என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது. அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன. பிறகு அதில் கூட்டப் படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை. இதை ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நற்பேறற்றவன் என்பவன், தன் தாயின் வயிற்றிலேயே நற்பேறற்றவனா(கப் பதிவா)கிவிட்டவன் ஆவான்; நற்பேறு பெற்றவன் என்பவன், பிறர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டவன் ஆவான்" என்று கூறியதைக் கேட்டேன். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) எனப்படும் ஒருவரிடம் சென்று, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதைத் தெரிவித்துவிட்டு, "செயல்படாமலேயே ஒருவன் எவ்வாறு நற்பேறற்றவனாக ஆகமுடியும்?" என்று கேட்டேன். அதற்கு ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதைக்கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்: விந்து கருப்பைக்குச் சென்று நாற்பத்து இரண்டு இரவுகள் கழிந்ததும் அதனிடம் அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்புகிறான். பிறகு (மூன்றாவது நாற்பது கழிந்தபின்) அதற்கு உருவமளித்து, அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான். பிறகு (நாற்பத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், "இறைவா! இது ஆணா, பெண்ணா?" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், "இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், "இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்துவிட்டுப் பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். (தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை இந்த என் காதுகளால் கேட்டேன் என்று கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது இரவுகள் தங்கியிருக்கிறது. பிறகு அதனுள் வானவர் ஒருவர் ஊடுருவுகிறார் "அதைப் படைக்கவிருக்கும் வானவர்" என்று அப்துல்லாஹ் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன் என்கிறார் அறிவிப்பாளர் ஸுஹைர் அபூகைஸமா. பிறகு அவ்வானவர் "இது ஆணா,பெண்ணா?" என்று கேட்கிறார். அப்போது அல்லாஹ் அதை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ ஆக்குகிறான். பிறகு அவ்வானவர், "இறைவா! இவன் ஊனமற்றவனா? ஊனமுள்ளவனா?" என்று கேட்கிறார். அப்போது அவனை அல்லாஹ் ஆரோக்கியமானவனாகவோ அல்லது ஆரோக்கியமற்றவனாகவோ ஆக்குகிறான். பிறகு அவ்வானவர், "இவனது வாழ்வாதாரம் என்ன? இவனது வாழ்நாள் எவ்வளவு? இவனுடைய குணங்கள் என்ன?" என்று கேட்கிறார். பிறகு அவனை அல்லாஹ் நற்பேறற்றவனாகவோ அல்லது நற்பேறு பெற்றவனாகவோ ஆக்குகிறான். - மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர் ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ் தனது நாட்டப்படி எதையேனும் படைக்க நாடும்போது, நாற்பதுக்கு மேற்பட்ட இரவுகள் கழிந்தபின் அந்தக் கருப்பைக்கென நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
ஹதீஸ் 6729 — Sahih Muslim 46:7
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ كُلْثُومٍ، حَدَّثَنِي أَبِي كُلْثُومٌ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَفَعَ الْحَدِيثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَّ مَلَكًا مُوَكَّلاً بِالرَّحِمِ إِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَخْلُقَ شَيْئًا بِإِذْنِ اللَّهِ لِبِضْعٍ وَأَرْبَعِينَ لَيْلَةً " . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ .
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ كُلْثُومٍ، حَدَّثَنِي أَبِي كُلْثُومٌ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَفَعَ الْحَدِيثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَّ مَلَكًا مُوَكَّلاً بِالرَّحِمِ إِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَخْلُقَ شَيْئًا بِإِذْنِ اللَّهِ لِبِضْعٍ وَأَرْبَعِينَ لَيْلَةً " . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தாயின் கருப்பைக்கென வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், "இறைவா! இது (ஒரு துளி) விந்து. இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டம்" என்று கூறிக்கொண்டிருப்பார். அதை அல்லாஹ் படைத்(து உயிர் தந்)திட நாடும்போது, "இறைவா! இது ஆணா,பெண்ணா? நற்பேறற்றதா? நற்பேறு பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?" என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் தெரிவிக்கப்பட்டு) தாய் வயிற்றில் அது இருக்கும் போதே பதிவு செய்யப்படுகின்றன. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடியில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள். பிறகு, "உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை" என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்" என்று கூறினார்கள். மேலும் அவர்கள், "நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்" என்று கூறினார்கள். பிறகு "யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குச்சியொன்றை எடுத்தார்கள்" என்று காணப்படுகிறது. "ஊன்றுகோல்" எனும் குறிப்பு இல்லை. "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வசனங்களை ஓதினார்கள்" என அபுல்அஹ்வஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது. அத்தியாயம் :