ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தானதர்மம், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்பலன் ஏதும் உண்டா, கூறுங்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று பதிலளித்தார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் (நன்மையை நாடி) பல நற்பணிகள் ஆற்றிவந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்குப் பிரதிபலன் உண்டா?)" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்(; உமக்கு நற்பலன் உண்டு)" என்று பதிலளித்தார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்துவந்த நற்செயல் எதையும் இஸ்லாத்திலும் செய்யாமல் இருக்கமாட்டேன்" என்று கூறினேன். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்; அவ்வாறே அன்னார் இஸ்லாத்தைத் தழுவிய பிறகும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள். நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறு கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 327 — Sahih Muslim 1:234
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتْ { الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ هُوَ كَمَا تَظُنُّونَ إِنَّمَا هُوَ كَمَا قَالَ لُقْمَانُ لاِبْنِهِ { يَا بُنَىَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ{}
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: "எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு" எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. மேலும், அவர்கள் "எங்களில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தம் இல்லை. உண்மையில் (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் "என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது தான் மாபெரும் அநீதியாகும்" என்று சொன்ன(தாக 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்ப)துதான் அதற்குப் பொருள் ஆகும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் நாடியவர்களை மன்னிப்பான்; அவன் நாடியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான்" எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று "செவியுற்றோம்; மாறு செய்தோம்" என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம்.(அவ்வாறு கூறிவிடாதீர்கள். மாறாக,) "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றே கூறுங்கள்" என்றார்கள். அவ்வாறே மக்கள், "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது" என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு (இறைவனுக்குப்) பணிந்தது (உள்ளமும்தான்). அதைத் தொடர்ந்து அல்லாஹ், "(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்று சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். "எங்கள் அதிபதியே! நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றும் அவர்கள் வேண்டுகிறார்கள்" எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான். ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், ("உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்" எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்: எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பை அல்லாஹ் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை தண்டித்து விடாதே! (2:286). "ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)" என்றான் அல்லாஹ். "எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்திவிடாதே!" அப்போதும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ். "எங்கள் சக்திக்கு மீறிய (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே!" அதற்கும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ். "எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்; மறுக்கின்ற கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" அதற்கும் "சரி! ஆகட்டும்!" என்றான் அல்லாஹ். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்" எனும் இந்த (2:284ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று அப்போது ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், "செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்; எங்களை ஒப்படைத்தோம்" (சமிஃனா, வ அதஃனா, வ சல்லம்னா) என்று கூறுங்கள்" என்றார்கள். உடனே (மக்களும் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், "அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பைச் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே!) "எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!" (என்று பிரார்த்தியுங்கள்)" எனும் (2:286ஆவது) வசனத் தொடரை அல்லாஹ் அருளினான். (அவ்வாறே மக்கள் பிரார்த்தித்ததும்) அல்லாஹ் "(உங்கள் பிரார்த்தனையை ஏற்று) அவ்வாறே செய்தேன்" என்றான். "எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்தாதிருப்பாயாக!" "அவ்வாறே செய்தேன்" என்றான் அல்லாஹ். "எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்" அதற்கும் அல்லாஹ் "அவ்வாறே செய்தேன்" என்றான். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :