மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த தரமுடைய மனிதரைப் பற்றிக் கேட்டார்கள்" என்று முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, "இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்" என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, "நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்" என்று கூறப்படும். அவரும் "ஆம்" என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், "நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு" என்று கூறப்படும். அப்போது அவர், "இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!" என்று கேட்பார். (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். அத்தியாயம் :
அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் ("உங்களில் யாரும் அங்கு -நரகத்திற்கு- வராமல் இருக்க முடியாது" எனும் (19:71ஆவது) வசனத்தில் இடம்பெற்றுள்ள) "வருதல்" பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர். முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து "நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?" என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், "நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவன், "நான்தான் உங்கள் இறைவன்" என்பான். மக்கள் "நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)" என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக்கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள். (அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்). பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள்மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக்கொண்டேயிருப்பார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 470 — Sahih Muslim 1:376
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، يَقُولُ سَمِعَهُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم بِأُذُنِهِ يَقُولُ " إِنَّ اللَّهَ يُخْرِجُ نَاسًا مِنَ النَّارِ فَيُدْخِلُهُمُ الْجَنَّةَ " .
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "மக்களில் சிலரை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றி,சொர்க்கத்திற்குள் அனுப்புவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் என் காதுபடக்கேட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 471 — Sahih Muslim 1:377
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ قُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ يُخْرِجُ قَوْمًا مِنَ النَّارِ بِالشَّفَاعَةِ " . قَالَ نَعَمْ .
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், "மக்களில் சிலரைப் பரிந்துரையின் பேரில் அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களில்) சிலர் தம் முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர மற்ற (அங்கங்கள்) யாவும் கரிந்துவிட்டிருக்கும் நிலையில் நரகநெருப்பிலிருந்து வெளியேறி, சொர்க்கத்திற்குள் நுழைவார்கள். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :