ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர் ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) "அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள்? (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம். அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும். நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம். பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம். அங்கே "கொழுப்புத் தலை திமிங்கலம்" (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது. (தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் "செத்ததாயிற்றே?" என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள். அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள். மேலும், அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள். பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள். (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து.) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்களேன்!" என்று கேட்டார்கள். உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் வாகனங்களில் அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் (படைக்குத்) தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையில் அரை மாதம் தங்கினோம். (இந்நாட்களில் உணவுப் பற்றாக் குறையால்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. எனவே,நாங்கள் கருவேல மரத்தின் இலைகளைப் புசித்தோம். ஆகவேதான், அந்தப் படைப்பிரிவு "கருவேலஇலை படைப்பிரிவு" எனப் பெயர் பெற்றது. இந்த (இக்கட்டான சூழ்)நிலையில் கடல் எங்களுக்கு "அல்அம்பர்" (கொழுப்புத் தலைத் திமிங்கலம்) எனப்படும் (ஒரு வகைக் கடல்வாழ்) உயிரினத்தை ஒதுக்கியது. நாங்கள் அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அ(ந்த மீனைப் புசித்த)தனால் (வலிமையான) உடல்கள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த மீனின் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுப் பிறகு,படையிலிருந்த உயரமான மனிதரையும், உயரமான ஒட்டகம் ஒன்றையும் கண்டு(பிடித்து), அவரை அந்த ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப, அவர் அந்த எலும்பிற்குக் கீழே (தலை முட்டாமல்) கடந்து சென்றார். அந்த மீனுடைய கண்ணின் எலும்புக்குள் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அதன் விழிப் பள்ளத்திலிருந்து நாங்கள் இப்படி இப்படி பெரிய பாத்திரத்தில் கொழுப்பை எடுத்தோம். (அந்தப் பயணத்தின் துவக்கத்தில்) எங்களுடன் ஒரு பை நிறைய பேரீச்சம் பழங்கள் இருந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப் பிடி பேரீச்சம் பழம் கொடுத்துவந்தார்கள். பிறகு (நாட்கள் செல்லச் செல்ல) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தந்தார்கள். அதுவும் தீர்ந்து விட்டபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கருவேல இலை"ப் படைப்பிரிவின் போது, ஒரு மனிதர் (கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள்) மூன்று ஒட்டகங்கள் அறு(த்து உணவளி)த்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு (அவர் அறுக்க முற்பட்டபோது) அவரை அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5001 — Sahih Muslim 34:30
وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ هِشَامِ، بْنِ عُرْوَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَعَثَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ ثَلاَثُمِائَةٍ نَحْمِلُ أَزْوَادَنَا عَلَى رِقَابِنَا .
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் அனுப்பினார்கள். நாங்கள் எங்கள் பயண உணவை எங்கள் தோள்களில் சுமந்து எடுத்துச் சென்றோம். அத்தியாயம் :