உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவரது பிரேதத்தை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்; இறுதியில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் போட்டு "இதை அவரது உடலில் போர்த்துங்கள்" என்று கூறினார்கள். இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، ح وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَقُتَيْبَةُ، بْنُ سَعِيدٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، كُلُّهُمْ عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَفِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ قَالَتْ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ . وَفِي حَدِيثِ مَالِكٍ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ . بِمِثْلِ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أُمِّ عَطِيَّةَ .
மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் இறந்தபோது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இப்னு உலைய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தோம்" என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவர்கள் எங்களிடம் வந்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வியார் ஸைனப் (ரலி) அவர்கள் இறந்தபோது "இவரை மூன்று முறை,அல்லது ஐந்து முறை ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள். ஐந்தாவது முறையில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் (அவ்வாறே செய்து முடித்ததும்) அவர்களுக்கு அதுபற்றி அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் தந்து "இதை அவருக்குப் போர்த்துங்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தவர்களிடம் "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதி பலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி பலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்றுவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு "கஃபன்" அணிவிக்கக் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்று மட்டுமே (அவருடைய உடைமைகளில்) கிடைத்தது. அதைக்கொண்டு அவரது தலைப் பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலைப் பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள்மீது "இத்கிர்" எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். எங்களில் (நாடு துறந்து சென்றதன்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் உள்ளனர். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :