அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்குப் பின் என் சமுதாயத்தில்" ("அல்லது எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில்") ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற இன்னின்ன ஹதீஸ்கள் என்ன?" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ர் (ரலி) அவர்கள், "நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும். இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப்பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2477 — Sahih Muslim 12:214
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ، مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ مُحَمَّدٍ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاللَّهِ إِنِّي لأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي - أَوْ فِي بَيْتِي - فَأَرْفَعُهَا لآكُلَهَا ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً - أَوْ مِنَ الصَّدَقَةِ - فَأُلْقِيهَا " .
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக.! நான் எனது வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது "எனது படுக்கையின் மீது" (அல்லது "எனது வீட்டில்") பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது "தர்மப்பொருளாக" (அல்லது "தர்மப்பொருட்களில் ஒன்றாக") இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுகின்றேன். அத்தியாயம் :