حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - عَنْ يَزِيدَ بْنِ أَبِي، عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، - رضى الله عنه - أَنَّهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ أَسْلَمَ يَوْمَ عَاشُورَاءَ فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ فِي النَّاسِ " مَنْ كَانَ لَمْ يَصُمْ فَلْيَصُمْ وَمَنْ كَانَ أَكَلَ فَلْيُتِمَّ صِيَامَهُ إِلَى اللَّيْلِ " .
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று "அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, "(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்" என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி "(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்" என்று அறிவிக்கச்செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம். அத்தியாயம் :
காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) நோன்பு பற்றிக்கேட்டேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளின் கிராமங்களுக்குத் தம் தூதுவர்களை அனுப்பினார்கள்" என்று கூறியதாக மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: நாங்கள் கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகத் தயார்செய்து, அவற்றை எங்களுடன் எடுத்துச்செல்வோம். சிறுவர்கள் எங்களிடம் உணவு கேட்பார்களானால், விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, அவர்கள் நோன்பை நிறைவு செய்யும்வரை கவனத்தைத் திசைதிருப்புவோம். அத்தியாயம் :