அபூகஸஆ சுவைத் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்த போது, "அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்மீது) பொய்யுரைக்கிறார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு "ஹிஜ்ர்" பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர் என்று கூறினார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அவர் கூறுகிறார்" என்றார். அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள், "இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை இப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்துல் மலிக் பின் மர்வான், "கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்" என்றார். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அப்படியானால்,கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன் (குறைஷி) சமூகத்தாருக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது" என்று பதிலளித்தார்கள். நான், "கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தாம் நாடியவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்பதற்காகவுமே உன் சமுதாயத்தார் இவ்வாறு செய்தனர். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கு இல்லாதிருந்தால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போல் ஆக்க முடிவு செய்திருப்பேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ர் (எனும் வளைந்த சுவரைப்) பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "ஏணி வைக்காமல் ஏற முடியாத அளவிற்குக் கஅபாவின் தலைவாயில் உயரமாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டேன்" என்றும் இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தபோது, "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க வந்தார். ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்; அப்பெண்ணும் ஃபள்லைப் பார்த்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்லின் முகத்தை வேறு பக்கம் திருப்பி விடலானார்கள். அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதியாக்கிய ஹஜ் கடமை, முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். இது "விடைபெறும்" ஹஜ்ஜின் போது நடைபெற்றது. அத்தியாயம் :
ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை) குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி (தம்) குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்" என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். அத்தியாயம் :