அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருடன் (அவர்களுக்குப் பின்னால் நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்களில் யாருமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை (சப்தமாக) ஓதியதை நான் கேட்டதில்லை. இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தொழுகையின் தொடக்கத்தில் தக்பீர் கூறிய பின்) சுப்ஹானக்கல்லாஹும்ம வ பி ஹம்திக்க, தபாரக்கஸ்முக்க, வ தஆலா ஜத்துக்க, வலா இலாஹ ஃகைருக்க என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (பொருள்: இறைவா! உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். உனது பெயர் சுபிட்சம் வாய்ந்தது. உனது பெருமை உயர்வானது. உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருக்குப் பின்னால் (நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று ஓதியே (தொழுகையை) ஆரம்பித்து வந்தார்கள். அவர்கள் (அதை) ஓதுவதற்கு முன்போ, பின்போ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறமாட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில், இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன். -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள் இரு காதுகளுக்கு நேராக என்று விவரித்தார்கள்.- பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பியபோது தம் கைகளை ஆடையிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு சஜ்தாச் செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(ளை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) சஜ்தாச் செய்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து தொழுகையில் (அமர்வில்) அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலா ஃபுலான் (அல்லாஹ்வுக்குச் சாந்தி உண்டாகட்டும்: இன்னாருக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறிவந்தோம். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம்,நிச்சயமாக அல்லாஹ்வே சலாம் (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையி(ன் இருப்பி)ல் அமர்ந்தால் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல்,செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்!) என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள நல்லடியார்கள் அனைவருக்கும் சலாம் கூறியதாகும். மேலும், அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறுங்கள். பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :