وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَحِيمًا رَقِيقًا فَظَنَّ أَنَّا قَدِ اشْتَقْنَا أَهْلَنَا فَسَأَلَنَا عَنْ مَنْ تَرَكْنَا مِنْ أَهْلِنَا فَأَخْبَرْنَاهُ فَقَالَ " ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ثُمَّ لْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ " .
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: )பனூலைஸ் தூதுக் குழுவில்) ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும் இளகிய மனம் படைத்தவராகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களிடையே தங்கியிருந்து அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள். (கடமைகளை நிறைவேற்றும்படி) அவர்களைப் பணியுங்கள். தொழுகை (நேரம்) வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகை அறிவிப்புச் செய்யட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் (என் குலத்தார்) சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள் ஒத்த வயதுடைய இளைஞர்களாய் இருந்தோம்" என்று மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன்) ஓதிய பின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) "ரப்பனா வ லக்கல் ஹம்து" (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறுவார்கள். பிறகு நின்றவாறு (பின்வரும் "குனூத்"தை) ஓதுவார்கள்: இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா, (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக! இறைவா! லிஹ்யான், ரிஅல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர். பிறகு "அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என நமக்குச் செய்தி எட்டியது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை. அத்தியாயம் :