பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: "இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான்" (14:27) எனும் இறைவசனம் மண்ணறை வேதனை தொடர்பாகவே அருளப்பெற்றது. இதை கைஸமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பு மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளரின் உயிர் பிரியும்போது அதை இரு வானவர்கள் எடுத்துக்கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள். -புதைல் பின் மைசரா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, அந்த உயிரிலிருந்து வரும் நறுமணம் குறித்தும் அதில் கஸ்தூரி மணம் கமழும் என்பது குறித்தும் குறிப்பிட்டார்கள் என அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.- அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), "ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!" என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டுசெல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், "இதை இறுதித் தவணைவரை (மறுமை நாள்வரை தங்கவைக்கப்பதற்காகக்) கொண்டுசெல்லுங்கள்" என்று கூறுவான். ஓர் இறைமறுப்பாளர் உயிர் பிரியும்போது -அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்புவது பற்றியும் வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள் என்பது பற்றியும் புதைல் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் -வானுலகவாசிகள், "ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது" என்று கூறுகின்றனர். அப்போது "இதை இறுதித் தவணைவரை கொண்டு செல்லுங்கள்" என்று கூறப்படுகிறது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை "இப்படி" கொண்டுசென்றார்கள் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (சைகை செய்து) கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில்) நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே (ஓரிடத்தில்) இருந்தோம். அப்போது (வானில்) பிறை தென்படுகிறதா என நாங்கள் பார்த்தோம். நான் கூர்மையான பார்வையுடைய மனிதனாக இருந்தேன். எனவே, நான் பிறையைப் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர பிறையைப் பார்த்ததாகக் கூற வேறெவரும் இருக்கவில்லை. அப்போது நான் உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டேன். அதைத் தாம் பார்க்கவில்லை என அவர்கள் கூறலானார்கள். "நான் எனது படுக்கையில் இருக்கும் போது அதைப் பார்ப்பேன்" என்றும் கூறலானார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள். பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். "அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்" என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர். பிறகு அவர்கள் அனைவரும் ஒரு கிணற்றில் ஒருவர்பின் ஒருவராகப் போடப்படலாயினர். பிறகு அவர்க(ளின் சடலங்க)ளை நோக்கிச் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவற்றைப் பார்த்து), "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் கண்டீர்களா? ஏனெனில், அல்லாஹ் எனக்கு வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் எனக்குப் பதிலேதும் கூற முடியாது" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டவர்க(ளின் உடல்)களை மூன்று நாட்கள் (அப்படியே) விட்டுவிட்டார்கள். பிறகு அவர்கள் அருகில் சென்று நின்றுகொண்டு, "அபூஜஹ்ல் பின் ஹிஷாமே! உமய்யா பின் கலஃபே! உத்பா பின் ரபீஆவே! ஷைபா பின் ரபீஆவே! உங்கள் இறைவன் வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் காணவில்லையா? ஏனெனில், எனக்கு என் இறைவன் வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களால் எப்படிக் கேட்க முடியும்? எவ்வாறு அவர்களால் பதிலளிக்க இயலும்? அவர்கள் முடைநாற்றம் வீசும் பிணங்களாகிவிட்டார்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீதாணையாக! நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் பதிலளிக்க இயலாது" என்று கூறினார்கள். பிறகு அவர்களை இழுத்துச் சென்று கற்சுவர் எழுப்பப்பட்டிருந்த கிணற்றில் போடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டனர். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "பத்ருப்போர் நாளன்று எதிரிகளைத் தோற்கடித்த பின்னர் இருபதுக்கும் அதிகமான, அல்லது இருபத்து நான்கு குறைஷித் தலைவர்களின் சடலங்களைப் பத்ரிலிருந்த உள்சுவர் எழுப்பப்பட்ட கிணறு ஒன்றில் தூக்கிப்போடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :