ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகங்கள் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி உமிழமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். மலஜலம் கழிக்கவுமாட்டார்கள். அவர்களுடைய பாத்திரங்களும் (தலைவாரும்) சீப்புகளும் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அவர்களது காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து அவர்களது பேரழகின் காரணத்தால் வெளியே தெரியும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது. எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். (நன்றிக்காக) அவர்கள் காலையும் மாலையும் இறைவனை (தூயவன் என)த் துதிப்பார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "(அவர்கள் உண்ணும்) உணவின் நிலை என்ன? (அது எப்படி கழிவாக வெளியேறும்?)" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நறுமணமுள்ள) ஏப்பமாகவும் கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும்" என்பதுவரையே இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில் ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் உண்ணும் அந்த உணவு" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7155 — Sahih Muslim 53:24
وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى الأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ " وَيُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّكْبِيرَ كَمَا يُلْهَمُونَ النَّفَسَ " .
மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் இறைவனைப் பெருமைப்படுத்திக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார்; துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது. இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நடுவில் துளையுள்ள முத்தாலான (பிரமாண்டமான) கூடாரம் ஒன்று சொர்க்கத்தில் உண்டு. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர்கள் மற்றவர்களைப் பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர் அவர்களைச் சுற்றிவருவார். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :