அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் "இஹ்ராம்" கட்டியவர்களாக (ஹஜ்ஜுக்கு)ப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்களில்) தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் தமது இஹ்ராமிலேயே நீடிக்கட்டும்; பலிப்பிராணியைக் கொண்டுவராதவர் இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னார்கள். அப்போது என்னுடன் பலிப்பிராணி இல்லாததால் நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டேன். (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுடன் பலிப்பிராணி இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அப்போது நான் எனது ஆடையை அணிந்து புறப்பட்டேன்; ஸுபைர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தேன். உடனே அவர்கள் "என்னிடமிருந்து எழுந்து (சென்று) விடு" என்றார்கள். அப்போது நான், "உங்கள் மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட தகவல் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், ("என்னிடமிருந்து எழுந்துவிடு" என்பதற்குப் பதிலாக) "என்னைவிட்டு விலகிச் சென்றுவிடு" என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், "உங்கள்மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா (ரலி) அவர்கள் (மக்காவில் "அல்முஅல்லா" பொது மையவாடி அருகிலுள்ள) "அல்ஹுஜூன்" எனும் மலையைக் கடந்து செல்லும்போதெல்லாம் பின்வருமாறு அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இங்கு வந்து தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக "இஹ்ராம்"கட்டி தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி ("சயீ"யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது"என்றே இடம்பெற்றுள்ளது. "அப்துல்லாஹ்" எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 3005 — Sahih Muslim 15:213
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُسْلِمٍ الْقُرِّيِّ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ - رضى الله عنهما - عَنْ مُتْعَةِ الْحَجِّ، فَرَخَّصَ فِيهَا وَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَنْهَى عَنْهَا فَقَالَ هَذِهِ أُمُّ ابْنِ الزُّبَيْرِ تُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِيهَا فَادْخُلُوا عَلَيْهَا فَاسْأَلُوهَا قَالَ فَدَخَلْنَا عَلَيْهَا فَإِذَا امْرَأَةٌ ضَخْمَةٌ عَمْيَاءُ فَقَالَتْ قَدْ رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا .
முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "தமத்துஉ" வகை ஹஜ் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். -இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்குத் தடை விதித்துவந்தார்கள்- எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இதோ இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்யத் தம்மை அனுமதித்தார்கள் எனக் கூறுகிறார்கள். ஆகவே, அவரிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்" என்றார்கள். அவ்வாறே அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் கனத்த உடலுடைய கண் பார்வையற்ற பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு அனுமதியளித்தார்கள்" எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُسْلِمٌ الْقُرِّيُّ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، - رضى الله عنهما - يَقُولُ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعُمْرَةٍ وَأَهَلَّ أَصْحَابُهُ بِحَجٍّ فَلَمْ يَحِلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلاَ مَنْ سَاقَ الْهَدْىَ مِنْ أَصْحَابِهِ وَحَلَّ بَقِيَّتُهُمْ فَكَانَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ فِيمَنْ سَاقَ الْهَدْىَ فَلَمْ يَحِلَّ .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அத்தியாயம் :
மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "தம்மிடம் பலிப்பிராணி இல்லாதவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் மற்றொரு மனிதரும் அடங்குவர்; எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :