அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்லத் திட்டமிட்டபோது) "அல்லாஹ் நாடினால் நாளை நாம் "பனூ கினானா" பள்ளத்தாக்கில் (அல்முஹஸ்ஸபில்) தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3175 — Sahih Muslim 15:379
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ بِمِنًى " نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ " . وَذَلِكَ إِنَّ قُرَيْشًا وَبَنِي كِنَانَةَ تَحَالَفَتْ عَلَى بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ وَلاَ يُبَايِعُوهُمْ حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَعْنِي بِذَلِكَ الْمُحَصَّبَ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை நாம் பனூ கினானா -அதாவது அல்முஹஸ்ஸப்- பள்ளத்தாக்கில் தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர். அதன் விவரம் வருமாறு: குறைஷியரும் பனூ கினானா குலத்தாரும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாருக்கெதிராக (அவர்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதாக) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒப்படைக்காதவரை அவ்விரு குலத்தாருடன் திருமண உறவோ வணிகரீதியான கொடுக்கல் வாங்கலோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்தனர். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "உங்கள் தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும் விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான் காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிடவில்லை; கருமித்தனமும் செய்ய வில்லை. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) உசாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டுவந்(து கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகிவிட்டு மீதியை உசாமா (ரலி) அவர்களுக்குப் பருகக் கொடுத்தார்கள். பிறகு, "நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்! இவ்வாறே செய்துவாருங்கள்!" என்று (எங்களைப் பாராட்டிக்) கூறினார்கள். எனவே,நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (உத்தரவுப்படியே செய்து வருகிறோம். அந்த) உத்தரவிற்கு மாற்றம் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். அத்தியாயம் :