Qurani·قرآني
தமிழ்

ஹஜ் நூல் (கிதாபுல் ஹஜ்)

607 ஹதீஸ்கள் · #2791–3397

ஹதீஸ் 3311 — Sahih Muslim 15:515
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مُسَاوِرٍ، الْوَرَّاقِ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ ‏.‏
அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3312 — Sahih Muslim 15:516
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، قَالَ حَدَّثَنِي وَفِي، رِوَايَةِ الْحُلْوَانِيِّ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ ‏.‏ وَلَمْ يَقُلْ أَبُو بَكْرٍ عَلَى الْمِنْبَرِ ‏.‏
அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சொற்பொழிவு மேடை மீதிருந்ததை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 3313 — Sahih Muslim 15:517
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيَّ - عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لأَهْلِهَا وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ وَإِنِّي دَعَوْتُ فِي صَاعِهَا وَمُدِّهَا بِمِثْلَىْ مَا دَعَا بِهِ إِبْرَاهِيمُ لأَهْلِ مَكَّةَ ‏"‏ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறி வித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம் ஏற்படப்) பிரார்த்திக்கிறேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3314 — Sahih Muslim 15:518
وَحَدَّثَنِيهِ أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ الْمُخْتَارِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، ح وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، كُلُّهُمْ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، - هُوَ الْمَازِنِيُّ - بِهَذَا الإِسْنَادِ أَمَّا حَدِيثُ وُهَيْبٍ فَكَرِوَايَةِ الدَّرَاوَرْدِيِّ ‏"‏ بِمِثْلَىْ مَا دَعَا بِهِ إِبْرَاهِيمُ ‏"‏ ‏.‏ وَأَمَّا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ وَعَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ فَفِي رِوَايَتِهِمَا ‏"‏ مِثْلَ مَا دَعَا بِهِ إِبْرَاهِيمُ ‏"‏‏.‏
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே "இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று இரு மடங்கு (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்று இடம்பெற்றுள்ளது. - சுலைமான் பின் பிலால் (ரஹ்) மற்றும் அப்துல் அஸீஸ் பின் அல்முக்தார் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்ததைப் போன்றே" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3315 — Sahih Muslim 15:519
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرٌ، - يَعْنِي ابْنَ مُضَرَ - عَنِ ابْنِ الْهَادِ، عَنْ أَبِي، بَكْرِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا ‏"‏ ‏.‏ يُرِيدُ الْمَدِينَةَ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான், இதன் (அதாவது மதீனாவின்) இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3316 — Sahih Muslim 15:520
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، خَطَبَ النَّاسَ فَذَكَرَ مَكَّةَ وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَلَمْ يَذْكُرِ الْمَدِينَةَ وَأَهْلَهَا وَحُرْمَتَهَا فَنَادَاهُ رَافِعُ بْنُ خَدِيجٍ فَقَالَ مَا لِي أَسْمَعُكَ ذَكَرْتَ مَكَّةَ وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَلَمْ تَذْكُرِ الْمَدِينَةَ وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَقَدْ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا بَيْنَ لاَبَتَيْهَا وَذَلِكَ عِنْدَنَا فِي أَدِيمٍ خَوْلاَنِيٍّ إِنْ شِئْتَ أَقْرَأْتُكَهُ ‏.‏ قَالَ فَسَكَتَ مَرْوَانُ ثُمَّ قَالَ قَدْ سَمِعْتُ بَعْضَ ذَلِكَ ‏.‏
நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மர்வான் பின் அல்ஹகம் மக்களிடையே உரையாற்றியபோது மக்காவைப் பற்றியும், மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் குறிப்பிட்டார். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகள் மற்றும் மதீனாவின் புனிதம் பற்றியோ குறிப்பிடவில்லை. அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் மர்வானை அழைத்து, "நீர் மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் கூறினீர். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் சிறப்பு பற்றியோ கூறவில்லையே ஏன்? மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதமானதாக அறிவித்துள்ளார்கள். இந்த விஷயம் எங்களிடமுள்ள ஒரு "கவ்லானீ" (குலத்தாரின் மெல்லிய) தோல் ஏட்டில் பதியப்பெற்றுள்ளது. நீர் விரும்பினால் அதை உமக்கு நான் வாசித்துக்காட்டுவேன்" என்று கூறினார்கள். மர்வான் (சிறிது நேரம்) அமைதியாக இருந்தார். பிறகு, "அதில் சிலவற்றை நானும் செவியுற்றுள்ளேன்" என்றார். அத்தியாயம் :
ஹதீஸ் 3317 — Sahih Muslim 15:521
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، كِلاَهُمَا عَنْ أَبِي أَحْمَدَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسْدِيُّ، - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ مَا بَيْنَ لاَبَتَيْهَا لاَ يُقْطَعُ عِضَاهُهَا وَلاَ يُصَادُ صَيْدُهَا ‏"‏ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3318 — Sahih Muslim 15:522
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَىِ الْمَدِينَةِ أَنْ يُقْطَعَ عِضَاهُهَا أَوْ يُقْتَلَ صَيْدُهَا - وَقَالَ - الْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ لاَ يَدَعُهَا أَحَدٌ رَغْبَةً عَنْهَا إِلاَّ أَبْدَلَ اللَّهُ فِيهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَلاَ يَثْبُتُ أَحَدٌ عَلَى لأْوَائِهَا وَجَهْدِهَا إِلاَّ كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் மரங்களை வெட்டுவது, அதன் வேட்டைப் பிராணிகளைக் கொல்வது ஆகியவற்றுக்கு நான் தடை விதிக்கிறேன். மக்கள் அறிந்துகொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரை விடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன். இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3319 — Sahih Muslim 15:523
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ الأَنْصَارِيُّ، أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏.‏ ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ وَزَادَ فِي الْحَدِيثِ ‏ "‏ وَلاَ يُرِيدُ أَحَدٌ أَهْلَ الْمَدِينَةِ بِسُوءٍ إِلاَّ أَذَابَهُ اللَّهُ فِي النَّارِ ذَوْبَ الرَّصَاصِ أَوْ ذَوْبَ الْمِلْحِ فِي الْمَاءِ ‏"‏ ‏.‏
மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைக்க எவரேனும் விரும்பினால் "நெருப்பில் ஈயம் கரைவதைப் போன்று" அல்லது "தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று" அவரை அல்லாஹ் கரைத்துவிடுவான்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3320 — Sahih Muslim 15:524
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنِ الْعَقَدِيِّ، - قَالَ عَبْدٌ أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ، سَعْدٍ أَنَّ سَعْدًا، رَكِبَ إِلَى قَصْرِهِ بِالْعَقِيقِ فَوَجَدَ عَبْدًا يَقْطَعُ شَجَرًا أَوْ يَخْبِطُهُ فَسَلَبَهُ فَلَمَّا رَجَعَ سَعْدٌ جَاءَهُ أَهْلُ الْعَبْدِ فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَى غُلاَمِهِمْ أَوْ عَلَيْهِمْ مَا أَخَذَ مِنْ غُلاَمِهِمْ فَقَالَ مَعَاذَ اللَّهِ أَنْ أَرُدَّ شَيْئًا نَفَّلَنِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَأَبَى أَنْ يَرُدَّ عَلَيْهِمْ ‏.‏
ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (மதீனாவிற்கு அருகில்) "அகீக்" எனுமிடத்திலிருந்த தமது பெரிய வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டார்கள். (வழியில்) அடிமையொருவர் "ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருப்பதை" அல்லது "இலைகளைப் பறித்துக்கொண்டிருப்பதை"க் கண்டார்கள். உடனே (அவரைப் பிடித்து) அவரது மேலாடையைக் கழற்றிக்கொண்டார்கள். சஅத் (ரலி) அவர்கள் திரும்பிவந்தபோது அவர்களிடம் அந்த அடிமையின் வீட்டார் வந்து தங்கள் அடிமையிடமிருந்து கைப்பற்றியதை "அந்த அடிமையிடம்" அல்லது "தங்களிடம்" திரும்பித் தருமாறு கேட்டார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வெகுமதியாக வழங்கிய எதையும் திருப்பித் தருவதிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" எனக் கூறி, அவர்களிடம் அதைத் தர மறுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.