அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "வாகனத்தின் மீது பயணம் செய்தபடி அல்ஃபத்ஹ் அத்தியாயத்தை ஒதிக்கொண்டிருந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், "இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்" என்று சொன்னார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ("மிரள ஆரம்பித்தது" என்பதற்கு பதிலாக) "குதிக்கலாயிற்று" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்) களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருளை என் தலைக்கு மேலே கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணமுடியவில்லை. காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டி ருக்கையில் என் குதிரை கடுமையாக மிரண்டது" என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று சொன்னேன். "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே!" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) கூறியபோது, "(என் மகன்) யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் இருந்தான். எனவே, நான் திரும்பிச் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தாம் அவர்கள். நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :