அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா உள்ளிட்ட இடங்களில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (அவ்வாறே தொழுவார்கள்). உஸ்மான் (ரலி) அவர்களும் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். பின்னர் அன்னார் (சுருக்கித் தொழாமல்) முழுமையாகவே தொழுதார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "மினாவில்" என்றே இடம்பெற்றுள்ளது. "அது உள்ளிட்ட இடங்களில்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களும், அபூபக்ருக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் (இரண்டு ரக்அத்களே தொழுதனர்). பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் (சுருக்கித் தொழாமல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (மினாவில்) இமாமைப் பின்பற்றித் தொழுதால் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; தனியாகத் தொழும்போது (சுருக்கி) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மினாவில், பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்). உஸ்மான் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) "எட்டு ஆண்டுகள்" அல்லது "ஆறு ஆண்டுகள்" (அவ்வாறே தொழுதார்கள்).(இதன் அறிவிப்பாளரான) ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் (அவ்வாறு) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) முழுமைப்படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "மினாவில்" என்ற குறிப்பில்லை. மாறாக, "பயணத்தில் (அவ்வாறு) தொழுதார்கள்" என்றே காணப்படுகின்றது. அத்தியாயம் :