حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْخَوْفِ فَصَفَّنَا صَفَّيْنِ صَفٌّ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ فَكَبَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَكَبَّرْنَا جَمِيعًا ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم السُّجُودَ وَقَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ وَقَامُوا ثُمَّ تَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ وَتَأَخَّرَ الصَّفُّ الْمُقَدَّمُ ثُمَّ رَكَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ الَّذِي كَانَ مُؤَخَّرًا فِي الرَّكْعَةِ الأُولَى وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نُحُورِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم السُّجُودَ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ فَسَجَدُوا ثُمَّ سَلَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَسَلَّمْنَا جَمِيعًا . قَالَ جَابِرٌ كَمَا يَصْنَعُ حَرَسُكُمْ هَؤُلاَءِ بِأُمَرَائِهِمْ .
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்ச நேரத் தொழுகையில் நான் பங்கேற்றுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் தமக்குப் பின்னால் இரு வரிசைகளில் நிறுத்தினார்கள். அப்போது எதிரிகள் எங்களுக்கும் தொழும் திசை(யான கிப்லாவு)க்குமிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி (தொழுகையைத் துவக்கி)னார்கள். (இரு வரிசைகளில் நின்றிருந்த) நாங்கள் அனைவரும் தக்பீர் கூறினோம். பின்னர் ருகூஉச் செய்தார்கள். நாங்கள் அனைவரும் ருகூஉச் செய்தோம். பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். நாங்கள் அனைவரும் (தலையை) உயர்த்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்கு அருகில் (முதல் வரிசையில்) நின்றவர்களும் குனிந்து சஜ்தாச் செய்தனர். அப்போது இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் (அப்படியே) எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்றுகொண்டேயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவை நிறைவேற்றி, முதல் வரிசையிலிருந்தவர்கள் (சஜ்தாச் செய்து) எழுந்து நின்றதும் இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் குனிந்து சஜ்தாச் செய்தனர். பிறகு எழுந்தனர். பிறகு இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் முன்னே (முதல் வரிசைக்கு) வந்தனர். முன் வரிசையிலிருந்தவர்கள் பின்னால் (இரண்டாம் வரிசைக்கு) வந்துவிட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தபோது (இரு வரிசைகளில் நின்றிருந்த) நாங்கள் அனைவரும் ருகூஉச் செய்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது (இரு வரிசைகளிலிருந்த) நாங்கள் அனைவரும் தலையை உயர்த்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குனிந்து சஜ்தாச் செய்தார்கள். முதல் ரக்அத் நடைபெற்றபோது பின் வரிசையிலிருந்தவர்களும் இப்போது நபியவர்களுக்கு அருகில் இருப்பவர்களுமான (முதல்) அணியினர் சஜ்தாச் செய்தார்கள். பின்வரிசையிலிருந்தவர்கள் (சஜ்தாச் செய்யாமல்) எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்று கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் முதல் வரிசையிலிருந்தவர்களும் சஜ்தாச் செய்து முடித்ததும் பின்வரிசையில் நின்றுகொண்டி ருந்தவர்களும் குனிந்து சஜ்தாச் செய்தனர். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது நாங்கள் அனைவரும் சலாம் கொடுத்தோம். (இன்றைக்கு எவ்வாறு) உங்கள் படைவீரர்கள் தங்கள் தலைவர்களுடன் சேர்ந்து (போர்க் களங்களில்) தொழுகின்றனரோ அதைப் போன்றுதான் (நாங்களும் செய்தோம்). அத்தியாயம் :
ஹதீஸ் 1946 — Sahih Muslim 6:374
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَوْمًا مِنْ جُهَيْنَةَ فَقَاتَلُونَا قِتَالاً شَدِيدًا فَلَمَّا صَلَّيْنَا الظُّهْرَ قَالَ الْمُشْرِكُونَ لَوْ مِلْنَا عَلَيْهِمْ مَيْلَةً لاَقْتَطَعْنَاهُمْ . فَأَخْبَرَ جِبْرِيلُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ فَذَكَرَ ذَلِكَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ - وَقَالُوا إِنَّهُ سَتَأْتِيهِمْ صَلاَةٌ هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنَ الأَوْلاَدِ فَلَمَّا حَضَرَتِ الْعَصْرُ - قَالَ - صَفَّنَا صَفَّيْنِ وَالْمُشْرِكُونَ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ - قَالَ - فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَبَّرْنَا وَرَكَعَ فَرَكَعْنَا ثُمَّ سَجَدَ وَسَجَدَ مَعَهُ الصَّفُّ الأَوَّلُ فَلَمَّا قَامُوا سَجَدَ الصَّفُّ الثَّانِي ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الأَوَّلُ وَتَقَدَّمَ الصَّفُّ الثَّانِي فَقَامُوا مَقَامَ الأَوَّلِ فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَبَّرْنَا وَرَكَعَ فَرَكَعْنَا ثُمَّ سَجَدَ وَسَجَدَ مَعَهُ الصَّفُّ الأَوَّلُ وَقَامَ الثَّانِي فَلَمَّا سَجَدَ سَجَدَ الصَّفُّ الثَّانِي ثُمَّ جَلَسُوا جَمِيعًا سَلَّمَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو الزُّبَيْرِ ثُمَّ خَصَّ جَابِرٌ أَنْ قَالَ كَمَا يُصَلِّي أُمَرَاؤُكُمْ هَؤُلاَءِ .
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். அவர்கள் எங்களிடம் கடுமையாகப் போரிட்டனர். நாங்கள் லுஹ்ர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது (எங்களை நோட்டமிட்ட) இணைவைப்பாளர்கள் "(முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும்போது) அவர்கள்மீது நாம் அதிரடித் தாக்குதல் தொடுத்தால் அவர்களை நாம் பூண்டோடு ஒழித்துவிடலாம்" என்று பேசிக் கொண்டனர். இந்த விவரத்தை (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். மேலும், "அவர்கள் ஒரு தொழுகையை எதிர்நோக்கியுள்ளனர். அது அவர்களுக்கு (தங்கள்) குழந்தை குட்டிகளைவிட மிக விருப்பமானதாகும்" என்று இணைவைப்பாளர்கள் கூறுகின்றனர் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இரு வரிசைகளில் அணிவகுக்கச் செய்தார்கள். இணைவைப்பாளர்கள் எங்களுக்கும் தொழும் திசை(யான கிப்லாவு)க்குமிடையே இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் தக்பீர் கூறி (தொழுகையைத் துவக்கி)னார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉச் செய்தார்கள். நாங்களும் ருகூஉச் செய்தோம். பிறகு அவர்கள் சஜ்தாச் செய்தபோது முதல் வரிசையிலிருந்தவர்கள் சஜ்தாச் செய்தனர். முதல் வரிசையிலிருந்தவர்கள் (சஜ்தாவிலிருந்து) எழுந்து நின்றதும் இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் சஜ்தாச் செய்தனர். பிறகு முதல் வரிசையிலிருந்தவர்கள் பின்வரிசைக்குச் சென்றுவிட, இரண்டாம் வரிசையிலிருந்தவர்கள் முன் வரிசைக்கு வந்து அவர்களது இடத்தில் நின்றனர். (இரண்டாவது ரக்அத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற நாங்கள் (அனைவரும்) தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்களும் ருகூஉச் செய்தோம். பிறகு அவர்கள் சஜ்தாச் செய்தபோது முதல் வரிசையிலிருந்தவர்களும் சஜ்தாச் செய்தனர். அப்போது இரண்டாவது வரிசையினர் நின்றுகொண்டனர். பின்னர் அவர்களும் சஜ்தாச் செய்த பின்னர் அனைவரும் அமர்ந்தோம். பின்னர் அனைவருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு ஜாபிர் (ரலி) அவர்கள் "இன்றைய தலைவர்கள் உங்களுக்குத் தொழுவிப்பதைப் போன்றே (அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்)" என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு அச்ச நேரத் தொழுகையைத் தொழுவித்தபோது அவர்களை இரு வரிசைகளில் தமக்குப் பின்னால் அணிவகுக்கச் செய்தார்கள்; தம்மை அடுத்து (முதல் வரிசையில்) இருந்தவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு எழுந்து நின்று கொண்டார்கள். பின்வரிசையில் நின்றவர்கள் ஒரு ரக்அத் தொழும்வரை அவ்வாறே நின்று கொண்டிருந்தார்கள். பிறகு பின்வரிசையில் இருந்தவர்கள் முன்வரிசைக்கு வந்தனர். முன்வரிசையிலிருந்தவர்கள் பின்வரிசைக்குச் சென்றுவிட்டனர். அப்போது முன்வரிசைக்காரர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு பின்வரிசைக்குச் சென்றவர்கள் ஒரு ரக்அத் தொழும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டாவது ரக்அத்தின் சஜ்தாவை முடித்த பின்) இருப்பில் அமர்ந்திருந்தார்கள். பிறகு சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தார்கள். இதை சாலிஹ் பின் கவ்வாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا يَحْيَى، بْنُ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كُنَّا بِذَاتِ الرِّقَاعِ قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا عَلَى شَجَرَةٍ ظَلِيلَةٍ تَرَكْنَاهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ - فَجَاءَ رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ وَسَيْفُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُعَلَّقٌ بِشَجَرَةٍ فَأَخَذَ سَيْفَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَاخْتَرَطَهُ فَقَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَتَخَافُنِي قَالَ " لاَ " . قَالَ فَمَنْ يَمْنَعُكَ مِنِّي قَالَ " اللَّهُ يَمْنَعُنِي مِنْكَ " . قَالَ فَتَهَدَّدَهُ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَغْمَدَ السَّيْفَ وَعَلَّقَهُ - قَالَ - فَنُودِيَ بِالصَّلاَةِ فَصَلَّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ ثُمَّ تَأَخَّرُوا وَصَلَّى بِالطَّائِفَةِ الأُخْرَى رَكْعَتَيْنِ قَالَ فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعُ رَكَعَاتٍ وَلِلْقَوْمِ رَكْعَتَانِ .
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். "தாத்துர் ரிகாஉ" என்னுமிடத்தில் (போரை முடித்து) நாங்கள் இருந்தபோது நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். நாங்கள் அந்த மரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த வாளை எடுத்து (உறையிலிருந்து) உருவிப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "எனக்கு நீர் அஞ்சுகிறீரா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிதும் அஞ்சாமல்) "இல்லை" என்று பதிலளித்தார்கள். அவர் "இப்போது என்னிடமிருந்து உம்மைக் காப்பவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உன்னிடமிருந்து என்னைக் காப்பான்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள். உடனே அவர் வாளை உறையிலிட்டு (பழையபடி மரத்தில்) தொங்கவிட்டுவிட்டார். பிறகு தொழுகைக்கு அழைப்புவிடப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (அச்ச நேரத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு இவ்வணியினர் பின்னால் விலகிக்கொள்ளவே, (எதிரிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த) மற்றோர் அணியினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்களும், மக்களுக்கு இரண்டு ரக்அத்களும் ஆயின. அத்தியாயம் :