ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்து வைப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (ஒரு நாள்) இந்தத் தொழுகையை (அதாவது அஸ்ர் தொழுகையை) முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால்,அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினோம். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள அங்கத் தூய்மையை (உளூவை) முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (பின் வருமாறு) அறிவிப்பதை நான் செவியுற்றேன்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக அங்கத் தூய்மை செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறுதான் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது. ஃகுன்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில் எனும் வாசகமோ கடமையாக்கப்பட்ட என்ற குறிப்போ இடம் பெறவில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான். இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 551 — Sahih Muslim 2:18
حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு என்று கூறுவாராயின் என்று (சற்று வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்.) அத்தியாயம் :