முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நீர்குவளையில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த மக்கள் சிலரைக் கண்டார்கள். அப்போது, உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு நரக வேதனைதான் என்று அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 575 — Sahih Muslim 2:42
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ " .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகாலகளுக்கு நரக வேதனைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். $ அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன. இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை புஜம்வரைக் கழுவினார்கள். பிறகு இடக்கரத்தை புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். பிறகு வலக் காலை கணைக்கால் வரைக் கழுவினார்கள். பிறகு இடக்காலையும் (அவ்வாறே) கணைக்கால்வரைக் கழுவினார்கள். பின்னர், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். மேலும், அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போராய் இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (தம் பிரதான உறுப்புகளை) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக்கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :