அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள். குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அறிவிப்பாளர் ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள், தம் தந்தை அபூஸாயிதா (ரஹ்) அவர்கள்தாம் அந்த பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணைவைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.) அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மலஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக்குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்,கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இணைவைப்பாளர்கள் (சார்பாக ஒருவர்) உங்கள் தோழர் (நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்கு மலஜலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத்தருவதாக நான் கருதுகிறேன் என்று கூறின(ô)ர். அதற்கு நான் ஆம்(உண்மைதான்);எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக்கூடாதென்றும் (மலஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும், கெட்டிச்சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்கள் என்றேன். அத்தியாயம் :
ஹதீஸ் 608 — Sahih Muslim 2:75
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَمَسَّحَ بِعَظْمٍ أَوْ بِبَعْرٍ .
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَمَسَّحَ بِعَظْمٍ أَوْ بِبَعْرٍ .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள். இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்;அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸ் உள்ள) ஷாம் நாட்டின் திசையை முன்னோக்கியபடியும் கிப்லா(கஅபா)வைப் பின்னோக்கியபடியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :