அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார். உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இன்ன மனிதரின் புதல்வரான இன்ன மனிதரல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்" என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து "இதில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, "இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! தாங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) தாங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு") மற்றும் தீமை ("அல்இஸ்மு") பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6517 — Sahih Muslim 45:17
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ صَالِحٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَوَّاسِ بْنِ سِمْعَانَ، قَالَ أَقَمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ سَنَةً مَا يَمْنَعُنِي مِنَ الْهِجْرَةِ إِلاَّ الْمَسْأَلَةُ كَانَ أَحَدُنَا إِذَا هَاجَرَ لَمْ يَسْأَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ - قَالَ - فَسَأَلْتُهُ عَنِ الْبِرِّ وَالإِثْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالإِثْمُ مَا حَاكَ فِي نَفْسِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ " .
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்தேன். அவர்களிடம் கேள்வி கேட்டு விடை தெரிந்துகொள்வ(து இயலாமல் போய் விடுமோ என்ப)தே ஹிஜ்ரத் செய்(து மதீனாவில் வந்து குடியேறு)வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. எங்களில் ஒருவர் ஹிஜ்ரத் செய்து (மதீனாவுக்கு வந்து குடியேறி)விட்டால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேள்வி கேட்காமலிருந்தார். (வெளியூர்காரர்கள் கேட்கட்டும். அதன் மூலம் நாம் அறிந்து கொள்வோம் என்று இருந்துவிடுவார்.) (இந்த வகையில்,)நான் அவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மை என்பது, நற்பண்பாகும். தீமை என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :