அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "உங்களுக்கு (குர்ஆன் அத்தியாயத்தை) ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்" என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், "என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?" என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். "(ஆம்) அல்லாஹ், உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: )ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு "அந்நிசா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டு வரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது "தலையை உயர்த்தினேன்" அல்லது "எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்". அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஹன்னாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி என்னிடம் "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்" என்று கூறினார்கள்" என (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1868 — Sahih Muslim 6:296
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَمِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، جَمِيعًا عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ . وَزَادَ هَنَّادٌ فِي رِوَايَتِهِ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ " اقْرَأْ عَلَىَّ " .
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَمِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، جَمِيعًا عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ . وَزَادَ هَنَّادٌ فِي رِوَايَتِهِ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ " اقْرَأْ عَلَىَّ " .
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு "அந்நிசா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஆரம்பம் முதல் "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" (4:41) என்பதுவரை ஓதிக் காட்டினேன். அதைக் கேட்டு அவர்கள் அழுதார்கள். இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மிஸ்அர் (ரஹ்) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது: நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களிடையே (உயிருடன்) இருந்தவரையில் அவர்களை நான் கண்காணித்துக்கொண்டிருந்தேன்"என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்தேன். அப்போது மக்களில் ஒருவர், "எங்களுக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார். நான் "யூசுஃப்" எனும் (12ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது ஒரு மனிதர் (அதை ஆட்சேபிக்கும் விதமாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை" என்று கூறினார். நான், "உமக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறுதான்) நான் இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஓதினேன். அவர்களும், "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்"என்று பதிலளித்தேன். (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவரது வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டேன். "மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா? (மது அருந்திய குற்றத்திற்காக) நீ சாட்டையடி பெறாமல் இந்த இடத்திலிருந்து நகர முடியாது" என்று கூறிவிட்டு, அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினேன். இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இன்னும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்" எனும் தகவல் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புகிறாரா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :