وَحَدَّثَنِي هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَجْمِعًا ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ - قَالَتْ- وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ . فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَى النَّاسَ
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரேயடியாகத் தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரித்ததை ஒருபோதும் நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும். (ஒரு நாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒரு விதமான கலக்கம் தங்களது முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா, அதில் (இறைவனின்) வேதனை இருக்கலாம் என்பதால், என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ("ஆத்" எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றால் வேதனை செய்யப்பட்டனர். அந்தச் சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்" என்றே கூறினர்" என பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ("ஸபா" எனும்) கீழைக்காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; "ஆத்" சமூகத்தார் ("தபூர்" எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (மக்களுடன்) தொழுதார்கள். அதில் நன்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவை நன்கு நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி நன்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முதல் நிலையைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நன்கு நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முதல் ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பிறகு எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாகவே இருந்தது. பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி, நிலையில் நின்றார்கள். அந்த நிலையிலும் நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். பின்னர் (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. கிரகணம் ஏற்படுவதை நீங்கள் கண்டால் "தக்பீர்" (அல்லாஹு அக்பர்) கூறுங்கள்; அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்; தானதர்மம் செய்யுங்கள். முஹம்மதின் சமுதாயத்தாரே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபட்டாலும் (அதைக் கண்டு) கடுமையாக ரோஷம் கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். நான் (சொல்ல வேண்டியதைச்) சொல்லிவிட்டேன் அல்லவா? இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும்" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று (தொழுகையில்) நின்று "தக்பீர்" கூறினார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிலையில்) நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். பிறகு "தக்பீர்" கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி "சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ். ரப்பனா வ ல(க்)கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறினார்கள். பிறகு நின்ற வண்ணம் நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். இ(ப்போது அவர்கள் ஓதிய)து முந்தைய ஓதலைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு "தக்பீர்" கூறி, நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். ரப்பனா வ ல(க்)கல் ஹம்து" எனக் கூறி (நிலையில் நின்று)விட்டு, பிறகு சஜ்தாச் செய்தார்கள். (அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் சஜ்தாச் செய்தார்கள்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.) பிறகு முந்தைய ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். அவர்கள் (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் பூர்த்தி செய்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன் சூரிய வெளிச்சம் வந்து விட்டிருந்தது. பிறகு எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே, அவற்றை நீங்கள் கண்டால் தொழுகைக்கு விரையுங்கள்" என்றும், "உங்களைவிட்டு அவற்றை அல்லாஹ் அகற்றும்வரை தொழுங்கள்" என்றும் கூறினார்கள். மேலும் "நான் இந்த இடத்தில் (தொழுகையில் நின்றிருந்தபோது) உங்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள அனைத்தையும் கண்டேன். (தொழுகையிலிருந்தபோது) நான் முன்னே செல்வதைப் போன்று நீங்கள் கண்டீர்களே, அப்போது சொர்க்கத்தின் பழக்குலை ஒன்றைப் பறிக்க நான் நாடினேன். பின்னர் நான் பின்வாங்குவதைக் கண்டீர்களே, அப்போது நான் நரகத்தைக் கண்டேன். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்து (உக்கிரமாக எரிந்து)கொண்டிருந்தது. மேலும், நரகத்தில் (அம்ர்) இப்னு லுஹை என்பாரைக் கண்டேன். அவர்தாம் முதன்முதலில் கடவுள் சிலைக்காக ஒட்டகத்தை (சாயிபா) நேர்ந்து விட்டவர் ஆவார்" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பு "தொழுகைக்கு விரையுங்கள்" என்பதோடு முடிந்துவிடுகிறது; அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் அவரது அறிவிப்பில் இடம் பெறவில்லை. அத்தியாயம் :
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ شِهَابٍ، يُخْبِرُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَهَرَ فِي صَلاَةِ الْخُسُوفِ بِقِرَاءَتِهِ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي كَثِيرُ بْنُ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள். - இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கிரகணம் ஏற்பட்டபோது) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை அறிவித்துவந்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :