அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது "பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா" (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!") என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்குக் குழந்தை விதிக்கப்பட்டால், அக்குழந்தைக்கு ஒரு போதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிஸ்மில்லாஹி" ("அல்லாஹ்வின் திருப் பெயரால்") எனும் குறிப்பு இடம்பெறவில்லை. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "பிஸ்மில்லாஹ்" இடம்பெற்றுள்ளது; மன்ஸூர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிஸ்மில்லாஹ் கூறியதாகவே கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் உடலுறவு கொண்டால் (பிறக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, "உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் புணரப்பட்ட பெண் கருவுற்றால் அவள் (பெற்றெடுக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். அப்போதுதான் "உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223ஆவது) வசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :