ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு "இரண்டு இரவுகள்” அல்லது "மூன்று இரவுகள்” (இரவுத் தொழுகைக்காகக்கூட) எழவில்லை. அவர்களிடம் ஒரு பெண் வந்து, "முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் "இரண்டு இரவுகளாக" அல்லது "மூன்று இரவுகளாக” உம்மை அந்த ஷைத்தான் நெருங்கி வரவில்லை" என்று கூறினாள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங் கொள்ளவுமில்லை" எனும் (93: 1-3)வசனங்களை அருளினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الْقَيْسِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَوْ أَتَيْتَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ قَالَ فَانْطَلَقَ إِلَيْهِ وَرَكِبَ حِمَارًا وَانْطَلَقَ الْمُسْلِمُونَ وَهِيَ أَرْضٌ سَبِخَةٌ فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ إِلَيْكَ عَنِّي فَوَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ . قَالَ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ - قَالَ - فَغَضِبَ لِعَبْدِ اللَّهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ - قَالَ - فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ - قَالَ - فَكَانَ بَيْنَهُمْ ضَرْبٌ بِالْجَرِيدِ وَبِالأَيْدِي وَبِالنِّعَالِ - قَالَ - فَبَلَغَنَا أَنَّهَا نَزَلَتْ فِيهِمْ { وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا} .
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், "தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் சென்றால் நன்றாயிருக்குமே!" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அப்துல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது, அவர், "தூர விலகிப்போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது" என்று கூறினார். அப்போது அன்சாரி(த் தோழர்)களில் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்" என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவரது (கஸ்ரஜ்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரப்பட்டார். அவ்விருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். ஈச்ச மட்டையாலும் கைகளாலும் செருப்பாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது, "இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தம்மிடையே சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்" (49:9) எனும் வசனம் அவர்கள் குறித்து அருளப்பட்டது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ருப் போர்க் களத்தில்) "அபூஜஹ்ல் என்ன ஆனான் எனப் பார்த்து வருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்துவரச்) சென்றார்கள். அவனை (அன்சாரியான) அஃப்ரா என்பவருடைய இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் (குற்றுயிராக) வீழ்ந்து கிடப்பதைக் கண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, "அபூஜஹ்ல் நீதானே!" என்று கேட்டார்கள். அதற்கு அபூஜஹ்ல், "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” அல்லது "தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” ஒருவன் உண்டா?" என்று (தன்னைத்தானே பெருமைப்படுத்திய) அவன் கேட்டான். அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "விவசாயக் குடியில் பிறக்காத ஒருவன் (அன்சாரி அல்லாதவன்) என்னைக் கொன்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே!" என அபூஜஹ்ல் கூறினான் என்று இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அபூஜஹ்ல் என்ன செய்கிறான் என எனக்காக அறிந்துவருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் குறிப்பும் இதில் இடம்பெறுகிறது. அத்தியாயம் :