யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறி (அவருக்குப் பதில் எழுதி)னார்கள். நஜ்தா தமது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்: இறைவாழ்த்துக்குப் பின்! அறப்போர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் கலந்துகொண்டார்களா? அவ்வாறு கலந்துகொண்ட பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுத்தார்களா? (போரில்) எதிரிகளின் குழந்தைகளைக் கொன்றார்களா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தில் முற்றுப்பெறும்? போரில் கைப்பற்றப்படும் செல்வங்களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதி யாருக்குரியது? இந்த ஐந்து விஷயங்கள் குறித்து எனக்கு அறிவியுங்கள். அவருக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதில் எழுதினார்கள்: நீர் என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்துகொண்டார்களா?” எனக்கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச்செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை. போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். மேலும், நீர் "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறுகிறது?” எனக் கேட்டிருந்தீர்.என் ஆயுளின் (அதிபதி)மீதாணையாக! சிலருக்குத் தாடி கூட முளைத்துவிடும். ஆனால், தமக்குரிய ஒன்றைப் பெறுவதிலும் தமக்குரிய ஒன்றைக் கொடுப்பதிலும் பலவீனத்துடனேயே அவர்கள் இருப்பர். (ஒன்றைப் பெறும்போது) மற்றவர்களைப் போன்று சரியான பொருளைப் பெறுகின்ற பக்குவத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அவனைவிட்டு அநாதை எனும் பெயர் நீங்கிவிடும். மேலும், நீர் என்னிடம் "போர்ச்செல்வத்தில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) யாருக்குரியது?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவந்தோம். ஆனால், எங்கள் மக்களே (பனூ உமைய்யா) அதை எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். (ஆகவே, குமுஸ் நிதி ஆட்சியாளராக வரும் அனைவரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும்.) அத்தியாயம் :
யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (காரிஜிய்யாக்களில் ஒருவரான) நஜ்தா பின் ஆமிர் அல்ஹரூரீ என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அடிமைகளும் பெண்களும் போர்ச்செல்வங்கள் பங்கிடப் படும் இடத்திற்கு வந்தால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா? (எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்லலாமா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப் பெறும்? (குமுஸைப் பற்றிக் கூறும் 8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்கள்” யார் ஆகியவை பற்றி விளக்கம் கேட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "அவருக்காகப் பதில் கடிதம் எழுது" என்று கூறிவிட்டு, "அவர் முட்டாள்தனமான ஒரு முடிவை எடுத்துவிடுவார் என்ற அச்சம் எனக்கில்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு எழுதச் சொன்னார்கள்: "நீர் என்னிடம் போர்ச் செல்வம் பங்கிடப்படும் இடத்திற்குப் பெண்களும் அடிமைகளும் வந்தால் அவர்களுக்கும் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா?" எனக் கேட்டிருந்தீர். போர்ச்செல்வத்தில் அந்த இரு பிரிவினருக்கும் ஏதேனும் (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டால் தவிர (குறிப்பிட்ட) பங்கேதும் இல்லை. (போரில் எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்வதைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தீர். (போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் அவர்களைக் கொல்ல வேண்டாம். மூசா (அலை) அவர்களின் நண்பர் (களிர்), தாம் கொன்ற சிறுவனைப் பற்றி (இறைவன் மூலம்) அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அக்குழந்தைகளைப் பற்றி அறிந்தால் தவிர. (அது உம்மால் இயலாது.) நீர் என்னிடம் அநாதைகளைப் பற்றி "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் பருவ வயதை அடைந்து, அவனிடம் பக்குவ நிலை தென்படாத வரை "அநாதை” எனும் பெயர் அவனிடமிருந்து நீங்காது. மேலும், நீர் என்னிடம் "(8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்" என்போர் யார்?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் உறவினர்களான) நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கூறினோம். ஆனால், அதை எங்கள் மக்கள் மறுத்துவிட்டனர் (எனவே ஆட்சியாளர்களின் உறவினர்களையும் அது குறிக்கும்). - இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முழுத் தகவல்களுடன் ஹதீஸ் இடம்பெறவில்லை. அத்தியாயம் :