ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே "அவர் இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மற்றவர்களது அறிவிப்பில் இக்குறிப்பு இல்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2328 — Sahih Muslim 12:65
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، كِلاَهُمَا عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، فِي حَدِيثِ قُتَيْبَةَ قَالَ قَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா நல்லறமும் தர்மமே. இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :