அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலம் இடமாக விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது "ஜும்தான்” எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, "செல்லுங்கள்: இது "ஜும்தான்" மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்" என்று சொன்னார்கள். மக்கள், "தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("அவற்றை மனனமிட்டவர்" என்பதைக் குறிக்க "மன் ஹஃபிழஹா" என்பதற்குப் பகரமாக) "மன் அஹ்ஸாஹா" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6810 — Sahih Muslim 48:6
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ " . وَزَادَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது (நூற்றுக்கு ஒன்று குறைவான) பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "தம்மைத் தாக்கிவிட்ட துன்பத்தின் காரணத்தால்" என்று காணப்படுகிறது. அத்தியாயம் :