حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ". وَإِذَا اسْتَيْقَظَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ".
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு உறங்கச் சென்ற பின்னால் தமது (வலக்) கையைத் தம்முடைய (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக்கொள்வார்கள். பிறகு, “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா” (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர்வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச்செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.9 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, “அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த” என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். எனது முகத்தை உன்னை நோக்கித் திருப்பினேன். எனது காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன்மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இவற்றைக் கூறிவிட்டு அன்றைய இரவே இறந்துபோகிறாரோ அவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்” என்றும் கூறினார்கள்.10 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தமது இயற்கைக்கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தை யும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக்கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத் தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப் பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தமது வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தமது தொழுகையை முடித்துக்கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டவாறு உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டைவிடுவார்கள். அப்போது அவர்களை பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். ஆகவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.10ஆ அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்: அல்லாஹும் மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வை யிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்து வாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும்) ஒளியை ஏற்படுத்துவாயாக.) (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படுத்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள்: என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக). இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். (இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்குமாறு நான் கூறினேன்.) ஆகவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்போது (வீட்டில்) இல்லாததால் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது (என்னைத் தொட்டுக்கொண்டிருந்த) அவர்களுடைய பாதங்களின் குளிர்ச்சியை எனது நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) “பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் ‘படுக்கைக்குச் சென்றதும்’ அல்லது ‘விரிப்புக்குச் சென்றதும்’ அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.12 இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ் என முப்பத்து நான்கு தடவை கூற வேண்டும்” என்று அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6319 — Sahih al Bukhari 80:16
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ، وَقَرَأَ بِالْمُعَوِّذَاتِ، وَمَسَحَ بِهِمَا جَسَدَهُ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் இறைப் பாதுகாப்புக் கோரும் (112, 113, 114 ஆகிய மூன்று) அத்தியாயங்களை ஓதி கைகளில் ஊதி அவற்றைத் தமது மேனியில் தடவிக்கொள்வார்கள்.13 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப் பைத் தட்டிவிடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து —ன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு. இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா. வ இன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன். (பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6321 — Sahih al Bukhari 80:18
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَتَنَزَّلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، وَمَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ?"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவ மன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6322 — Sahih al Bukhari 80:19
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” என்று கூறுவார்கள். (பொருள்: இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)15 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து” என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்துகொடுத்த உறுதிமொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.) மாலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்துபோனால் அவர் ‘சொர்க்கம் செல்வார்’ அல்லது ‘சொர்க்கவாசியாவார்’. காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்துபோனால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்). இதை ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அத்தியாயம் :