உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக் கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால்வரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இவ்வாறு அங்கத் தூய்மை செய்வதுதான் தொழுகைக்காக ஒருவர் அங்கத் தூய்மை செய்யும் முறைகளிலேயே மிகவும் நிறைவானதாகும் என்று நம் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) அங்கத் தூய்மை செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்த பின்,கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்து வைப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (ஒரு நாள்) இந்தத் தொழுகையை (அதாவது அஸ்ர் தொழுகையை) முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால்,அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினோம். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள அங்கத் தூய்மையை (உளூவை) முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (பின் வருமாறு) அறிவிப்பதை நான் செவியுற்றேன்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக அங்கத் தூய்மை செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறுதான் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது. ஃகுன்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில் எனும் வாசகமோ கடமையாக்கப்பட்ட என்ற குறிப்போ இடம் பெறவில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :