உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தலையை மழித்துக் கொள்பவர்களுக்காக மூன்று முறையும், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்காக ஒரு முறையும் பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "விடைபெறும் ஹஜ் ஜின்போது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (தலையின்) வலப்பக்கத்தை நாவிதரிடம் காட்டி "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியைத் தமக்கு அருகிலிருந்த மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் தமது (தலையின்) இடப்பக்கத்தை நாவிதரிடம் காட்டினார்கள். அவர் அதை மழித்தார். அந்த முடியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் (தமது தலையின்) வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப்பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகு, "அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறிந்துவிட்டுப் பிறகு பலி ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதை அறுத்தார்கள். நாவிதரும் அங்கே அமர்ந்திருந்தார். அவரி டம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கையால் சுட்டிக் காட்டினார்கள். வலப் பக்கத்தை அவர் மழித்ததும் முடியைத் தமக்கு அருகிலிருந்தவர்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பிறகு நாவிதரிடம் "மறு பக்கத்தை மழி" என்றார்கள். பின்னர் "அபூதல்ஹா எங்கே?" என்று கேட்டு, (அவர்கள் வந்ததும்) அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கற்களை எறிந்து, தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப்பக்கத்தைக் காட்டி "மழி" என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!" என்றார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து) நின்று, "நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்க வில்லை" என்றார். பிறகு மற்றொரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன் எனக்கூறி, (கல்லெறிதல், பலிப்பிராணியை அறுத்தல், தலைமுடி களையுதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்" என்றே விடையளித்தார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள "இம்மூன்று விஷயங்களை" என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன; "இம்மூன்று விஷயங்களை" எனும் வாசகம் அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை. யஹ்யா அல்உமவீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :