அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் நரகத்தில் நுழையமாட்டார்; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், "உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால்,அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?" என்று கேட்டார். "இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6699 — Sahih Muslim 45:196
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ الأَصْبَهَانِيِّ عَنْ أَبِي صَالِحٍ، ذَكْوَانَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ . قَالَ " اجْتَمِعْنَ يَوْمَ كَذَا وَكَذَا " . فَاجْتَمَعْنَ فَأَتَاهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ قَالَ " مَا مِنْكُنَّ مِنِ امْرَأَةٍ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا مِنْ وَلَدِهَا ثَلاَثَةً إِلاَّ كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ " . فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ " .
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவே,எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். (ஒரு நாள்), "உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் பிள்ளைகளில் மூன்று பேரை இழந்துவிடுகிறாரோ அவருக்கு அப்பிள்ளைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்" என்று சொன்னார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா?" என்று (மூன்றுமுறை திரும்பத்திரும்பக்) கேட்க, "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும் தான்" என்று (மும்முறை) நபியவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :