மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "(அல்கமா பின் உலாஸாவா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைலா என்ற ஐயப்பாடின்றி) அல்கமா பின் உலாஸா என்றே இடம்பெற்றுள்ளது. ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) அவர்களது பெயர் காணப்படவில்லை. மேலும் ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாத்திஉல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இடம்பெற்றுள்ளது. "நாஷிஸுல் ஜப்ஹா" எனும் சொற்றொடர் இல்லை. மேலும், இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் வாள்" (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டு, "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("ஹவாஸின்") போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் அருகே நாங்கள் இருந்தோம். அப்போது "பனூ தமீம்" குலத்தைச் சேர்ந்த "துல்குவைஸிரா" எனும் மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்" என்று பதிலளித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டையை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான இரத்தக்குறி எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப் படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டு விட்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்புநிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்களில் ஒன்று "பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்" அல்லது "துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்". அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று சொன்னார்கள். நான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள்.அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அவர்கள் சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் (ராஜதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. ஏனெனில்,) போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச்சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (இஸ்லாமிய ஆட்சியாளர்களே!) அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :