ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச்செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்: எனது பங்கையும் (என் குதிரை) உபைதின் பங்கையும் உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே பங்கிடுகிறீரா? சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை. அவ்விருவரையும்விட நான் குறைந்தவனுமில்லை. யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ அவர் உயர்த்தப்படப்போவதில்லை. அப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமையாக்கி (வழங்கி)னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு (மட்டும்) அவற்றைக் கொடுத்தார்கள். (அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை.) அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்கவேண்டுமென அன்சாரிகள் விரும்புகின்றார்கள் என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, அன்சாரிகளிடையே (அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக) உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, "அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கவில்லையா? நீங்கள் (இனவாதம் பேசி) பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (தமது வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நபியவர்கள் சொல்லும்போதெல்லாம்) "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரிகள்" என்று அன்சாரிகள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?" என்று கேட்க, அன்சாரிகள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப்பெரும் உபகாரிகள்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்களும் விரும்பினால் இன்னின்னவாறு இன்னின்ன நேரத்தில் நடந்தது என்று (நீங்கள் எனக்குச் செய்த உதவிகளையும் பட்டியலிட்டுக்) கூறலாம்" என்று சில விஷயங்களைச் சொல்லிக்காட்டினார்கள். -அந்த விஷயங்கள் எவையெவை என்பதைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.- மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே (என்னையே) கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அன்சாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். (அன்சாரிகளாகிய) நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச்செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன்-ரலி) அவர்களுக்கும் அதைப் போன்றே (நூறு ஒட்டகங்கள்) கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள். அன்றையதினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை" என்று சொன்னார். உடனே நான், "இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் சிவப்புச்சாயம் போல் மாறிவிட்டது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறுயார் தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக் கொண்டார்கள்" என்று கூறினார்கள். நான் "உறுதியாக! இனிமேல் எந்தச் செய்தியையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்" என்று சொன்னேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2448 — Sahih Muslim 12:185
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَسْمًا فَقَالَ رَجُلٌ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ - قَالَ - فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَارَرْتُهُ فَغَضِبَ مِنْ ذَلِكَ غَضَبًا شَدِيدًا وَاحْمَرَّ وَجْهُهُ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَذْكُرْهُ لَهُ - قَالَ - ثُمَّ قَالَ " قَدْ أُوذِيَ مُوسَى بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ " .
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَسْمًا فَقَالَ رَجُلٌ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ - قَالَ - فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَارَرْتُهُ فَغَضِبَ مِنْ ذَلِكَ غَضَبًا شَدِيدًا وَاحْمَرَّ وَجْهُهُ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَذْكُرْهُ لَهُ - قَالَ - ثُمَّ قَالَ " قَدْ أُوذِيَ مُوسَى بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ " .
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ أَبِي نُعْمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَ عَلِيٌّ - رضى الله عنه - وَهُوَ بِالْيَمَنِ بِذَهَبَةٍ فِي تُرْبَتِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَسَمَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ الأَقْرَعُ بْنُ حَابِسٍ الْحَنْظَلِيُّ وَعُيَيْنَةُ بْنُ بَدْرٍ الْفَزَارِيُّ وَعَلْقَمَةُ بْنُ عُلاَثَةَ الْعَامِرِيُّ ثُمَّ أَحَدُ بَنِي كِلاَبٍ وَزَيْدُ الْخَيْرِ الطَّائِيُّ ثُمَّ أَحَدُ بَنِي نَبْهَانَ - قَالَ - فَغَضِبَتْ قُرَيْشٌ فَقَالُوا أَتُعْطِي صَنَادِيدَ نَجْدٍ وَتَدَعُنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ لأَتَأَلَّفَهُمْ " فَجَاءَ رَجُلٌ كَثُّ اللِّحْيَةِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ غَائِرُ الْعَيْنَيْنِ نَاتِئُ الْجَبِينِ مَحْلُوقُ الرَّأْسِ فَقَالَ اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ . - قَالَ - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَمَنْ يُطِعِ اللَّهَ إِنْ عَصَيْتُهُ أَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الأَرْضِ وَلاَ تَأْمَنُونِي " قَالَ ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَاسْتَأْذَنَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فِي قَتْلِهِ - يُرَوْنَ أَنَّهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ " .
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும். இதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். "நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டுவிடுகிறீர்களே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்" என்று கூறினார்கள். அப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானே (அல்லாஹ்விற்கு) மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை யமனிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ரலி); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தாம்" என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன" என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த,அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள். பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று கூறினார்கள். "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :